ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விவசாயிகளே உருவாக்கிய நுண்ணீர் பாசன முறை: நிதி ஒதுக்குமா அரசு?

News image
Updated On :7 செப்டம்பர் 2016, 7:03 am

பொள்ளாச்சி, செப். 6: பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் வி.வேலூர் கிளைக் கால்வாய் பகுதியில் விவசாயிகள் உருவாக்கிய நவீன நுண்ணீர் பாசனத் திட்டத்துக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் (பிஏபி) திருமூர்த்தி அணையிலிருந்து 3 லட்சத்து 77,158 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்களுக்குத் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால், ஓராண்டு தண்ணீர் கிடைத்த பகுதிக்கு அடுத்த ஆண்டு தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் பாதிப்படைந்து வருகிறது.
இந்நிலையில், பொதுப் பணித் துறையால் வழங்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி பாசனம் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகளே உருவாக்கியுள்ளனர். இதற்கு வேளாண் பொறியாளர்கள், வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவிகளையும் விவசாயிகள் பயன்படுத்தியுள்ளனர்.
புதிய பாசன முறை: தற்போது, பிரதானக் கால்வாய்களில் இருந்து கிளைக் கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது. கிளைக் கால்வாய்களில் தண்ணீர் ஆவியாதல், கால்வாய் பழுது போன்றவற்றால் அதிக அளவு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதைத் தடுக்கும் விதமாக, விவசாயிகள் புதிய பாசன முறையை உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்தின்படி, பிரதானக் கால்வாயிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. அந்தக் கால்வாயில் பயனடையும் விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்ள தானியங்கி இயந்திரம் பொருத்தப்படுகிறது. இந்தத் தண்ணீரானது விவசாயத் தோட்டங்களுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தொட்டி அமைத்து தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன முறையில் அளிக்கப்படுகிறது.
பெரும்பாலான தோட்டங்களுக்குப் பிரதானக் கால்வாயில் இருந்து புவிஈர்ப்பு விசை மூலமே தண்ணீர் சென்றுவிடும் என்பதால், பெருமளவு மின்சாரமும் சேமிக்கப்படும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தால் தண்ணீர் விரயம் முற்றிலுமாகத் தடுக்கப்படுவதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் தண்ணீரை வைத்தே ஆண்டுதோறும் பயிர்களுக்குப் பாசனம் வழங்க முடியும்.
இந்தத் திட்டம் முன்மாதிரியாக திருப்பூர் மாவட்டம், வெறுவேடம்பாளையத்தில் ஒரு சிறிய பகுதிக்குச் செயல்படுத்தப்பட்டது. தற்போது, இத்திட்டத்தை மேலும் நவீனப்படுத்தி பொள்ளாச்சியை அடுத்த வி.வேலூரில் 1,757 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தும் வகையில் விவசாயிகள் உருவாக்கியுள்ளனர். மேலும், இத்திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொலைநோக்கு நுண்ணீர் பாசனத் திட்டத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: இத்திட்டத்தின்படி, ரூ.49 கோடி நிதி இருந்தால் வி.வேலூர் பகுதியில் உள்ள 1,757 ஏக்கருக்கு ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் வழங்க முடியும். தற்போது, வி.வேலூர் பகுதியில் 1,757 ஏக்கரில் 888 ஏக்கருக்கு ஓர் ஆண்டும், மீதமுள்ள 889 ஏக்கருக்கு அதற்கு அடுத்த ஆண்டும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் 5,328 டன் விளை பொருள்கள் உற்பத்தி நடைபெறுகிறது. இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தினால் இரண்டு ஆண்டுகளில் 28,000 டன் வரை விளைபொருள் உற்பத்தி செய்யமுடியும்.
இந்தத் திட்டத்தை திருமூர்த்தி அணையில் பயன்பெறும் 3.77 லட்சம் ஏக்கருக்கும் செயல்படுத்த வேண்டுமானால் ரூ.7,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை நிதி தேவைப்படும். இதன் மூலம் மூன்று மடங்கு விளைச்சலைப் பெற முடியும் என்றார்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் முத்துச்சாமி கூறியதாவது: இந்தத் திட்டம் சாத்தியம் உள்ள ஒன்றுதான். இதன் மூலம் நீர் விரயமாவது முற்றிலுமாக குறைவதுடன், விளைச்சலும் அதிகரிக்கும். இத்திட்டத்தில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன் பின்னர் இந்த அறிக்கையை தோட்டக் கலைத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க உள்ளோம். இத்திட்டம் செயல்படுத்த ரூ.48.70 கோடி நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.