தினகரன் - ஓபிஎஸ் அணியினர் மோதல்: 10 பேர் காயம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உருவத்துடன்கூடிய சவப்பெட்டி மாதிரியை வைத்து பிரசாரம் செய்தது தொடர்பாக அதிமுக (அம்மா),


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உருவத்துடன்கூடிய சவப்பெட்டி மாதிரியை வைத்து பிரசாரம் செய்தது தொடர்பாக அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியினரிடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி நேதாஜி நகர் பகுதியில் அதிமுக (புதஅ) அணியினர் வியாழக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது அந்த அணியைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான கே.பாண்டியராஜன் தலைமையில் தேசியக்கொடி போர்த்தப்பட்ட நிலையில் ஜெயலலிதா உருவத்துடன்கூடிய சவப்பெட்டி மாதிரியுடன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்துக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்பினரும் அங்கிருந்த கற்கள், கட்டைகள் உள்ளிட்டவற்றை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் முன்னாள் எம்எல்ஏ உள்பட இருதரப்பைச் சேர்ந்த 10 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இருதரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அந்தப் பகுதியில் துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னதாக காயமடைந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள்: பிரசாரத்தில் ஜெயலலிதாவின் உருவத்துடன்கூடிய சவப்பெட்டி மாதிரி இடம்பெற்றதைக் கண்டித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக அம்மா அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலத்தின் முன்பு வியாழக்கிழமை இரவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஓ.பி.எஸ். அணியினர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு வந்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பிரிவு அதிகாரிகள் சவப்பெட்டி பிரசாரத்துக்கு தடை விதித்தனர். மேலும், தேசியக்கொடியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...