செம்மரங்கள் கடத்தல்: பின்னணியில் சர்வதேச கடத்தல் மாஃபியாக்களா?

சுங்கத்துறை, காவல்துறை, வருவாய்ப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைப்புகளும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வந்தும் அரியவகை தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ள
செம்மரங்கள் கடத்தல்: பின்னணியில் சர்வதேச கடத்தல் மாஃபியாக்களா?

சுங்கத்துறை, காவல்துறை, வருவாய்ப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைப்புகளும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வந்தும் அரியவகை தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ள செம்மரங்கள் தொடர்ந்து கடத்தப்படுவது சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி விடியற்காலையில் தமிழகத்துக்குக் கிடைத்த அதிர்ச்சி செய்தி செம்மரம் வெட்டச் சென்ற திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்பதுதான். இதனைத் தொடர்ந்து இருமாநில உறவுகள்கூட பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டது. இந்த அளவிற்கு தொழிலாளர்களை சுட்டுக் கொல்லக் கூடிய முடிவை எடுத்ததற்கு காரணம் வெட்டுபவர்களை தடுக்க முடியாததுதான் என ஆந்திர போலீஸார் தெரிவித்தனர்.
அப்படியும் தடுக்க முடியவில்லை என்பது இச்சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் உணர முடிந்துள்ளது.
செம்மரக் கடத்தலில் மரங்களை வெட்டுவதும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு கடத்துவதும்தான் முக்கியப் பணியாகும். உயிரைப் பணயம் வைக்கும் ஏழைத் தொழிலாளர்களே இதில் பங்கு வகிக்கின்றனர். பிறகு வாகனங்களில் கடத்துவது, சரக்குப் பெட்டகங்களில் வேறு சரக்குகளுக்குப் பதிலாக செம்மரங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், அங்கிருந்து ஹவாலா மூலம் அந்நியச் செலாவணியை இடம் மாற்றுவதும் சர்வதேச கடத்தல் மாஃபியாக்களின் பணியாக உள்ளது.
அரியவகைத் தாவரமான செம்மரத்தின் சிறப்பு: அழிந்து வரும் அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் காப்பதற்கான சர்வதேச அமைப்பு (இஐபஉந- பட்ங் இர்ய்ஸ்ங்ய்ற்ண்ர்ய் ர்ய் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்
பழ்ஹக்ங் ண்ய் உய்க்ஹய்ஞ்ங்ழ்ங்க் நல்ங்ஸ்ரீண்ங்ள் ர்ச் ரண்ப்க் ஊஹன்ய்ஹ ஹய்க் ஊப்ர்ழ்ஹ) செம்மரத்தை அரிய வகைத் தாவரமாக அறிவித்துள்ளது. இம்முடிவை தற்போது கடத்தலில் தொடர்புடைய நாடுகளும் கூட ஏற்றுக்கொண்டுதான் உள்ளன. அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளில் வளரும் தன்மை கொண்ட செம்மரங்கள் உலகிலேயே தென்னிந்தியாவில் மட்டுமே இருக்கின்றன. அதிலும் பெரும்பகுதி ஆந்திர மாநிலத்திலும், தெலங்கானா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும்தான் இம்மரங்கள் உள்ளன. நறுமண வாசனை ஏதுமற்ற செம்மரங்கள் உறுதியானது மட்டுமல்ல... பளபளக்கும் தன்மை கொண்டது. எனவே நீண்ட காலம் உபயோகப்படுத்தும் பொருள்களான இசைக்கருவிகள், விளையாட்டுக் கருவிகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது தவிர விலை உயர்ந்த அரிய வகை மருந்துகள் தயாரிக்கவும் செம்மரங்கள் உதவுகின்றன.
சர்வதேச சந்தையில் டன் ரூ. 1.50 கோடி: செம்மரங்களைப் பயன்படுத்துவதில் சீனா, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா உள்ளிட்ட நாடுகள்தான் முக்கிய இடம் வகிக்கின்றன. அங்கு ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் டன் செம்மரக் கட்டைகள் தேவைப்படுகிறது. ஆனால் சர்வதேச விதிமுறைகளை உள்ளடக்கிய அரசு அனுமதி பெற்ற விற்பனை என்பது மிகவும் சொற்பம்தான். எனவேதான் செம்மரங்களுக்கு இவ்வளவு கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேசச் சந்தையில் செம்மரத்தின் விலை டன் ஒன்றுக்கு சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது.
ஏழ்மையை மூலதனமாக்கும் கடத்தல் மாஃபியாக்கள்: தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருப்பது ஜவ்வாது மலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500 அடிவரை உயரத்தில் உள்ள ஜவ்வாது மலையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு மரம் வெட்டுவதுதான் முக்கியத் தொழில்.
இதேமாதிரியான நில அமைப்பு கொண்ட பகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி. ஆனால் இங்கு ஏழ்மைக்கு இடமில்லை. காரணம் இப்பகுதியில் உலகில் விலைமதிப்பு கொண்ட செம்மரங்கள் விளைகின்றன என்பதுதான்.
இங்குதான் கடத்தல்காரர்கள் தங்களது வலையை விரிக்கின்றனர். ஏழ்மையைப் பயன்படுத்தி ஜவ்வாது மலை கிராமவாசிகளுக்கு ரூ. 2,000 தினக்கூலி அளிக்கவும், அதனை முன்பணமாகவே கொடுத்து, அழைத்து வரும் தரகர்களுக்கும் தக்க சன்மானம் அளிப்பதால் மரம் வெட்டும் பணி எளிதாகவே நடைபெறுகிறது.
தொடரும் கடத்தல் சம்பவங்கள்: கடந்த மாதம் 5 கன்டெய்னர்களில் பிளாஸ்டிக் குழாய்கள் ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்ட ஆவணங்களுடன் ஆந்திரத்திலிருந்து முதலில் வந்த ஒரு கன்டெய்னரைச் சோதனையிட்டபோது அதில் 10 டன் செம்மரக்கட்டைகள் இருந்தன. இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே லாரி டிரைவர், உரிமையாளர், ஏற்றுமதியாளர், சுங்க முகவர் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவானது மட்டுமல்ல... மீதம் வரவேண்டிய நான்கு கன்டெய்னர்களையும் திரும்பவும் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்கள். இந்த அளவுக்கு கடத்தல்காரர்களின் சங்கிலித் தொடர் இணைப்புகள் உள்ளன.
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: செம்மரம் கடத்தப்படுவதால் ஏழ்மையில் உழலும் தொழிலாளர்கள் பலிகடாவாக்கப்படுகின்றனர். இதில் வரும் அதிக அளவிலான கள்ளப் பணத்தால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என அனைவரும் செழிக்கின்றனர். இது தேசநலனுக்கு நல்லது அல்ல. மேலும் உலகின் அரிய வகைத் தாவரமான செம்மரங்கள் நமது நாட்டில் இருப்பது பெருமை. எனவே இதில் தொடர்புடைய மாநில அரசுகள் இணைந்து தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ளவேண்டும். கடத்தல்காரர்களை அனைத்து நிலைகளிலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஏழைத் தொழிலாளர்களைக் கடத்தல் வாணிபத்தில் பலிகடாவாக்காமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளையும் செய்து தரவேண்டும். இவை மட்டுமே செம்மரக் கடத்தலை நிரந்தரமாகத் தடுப்பதாக அமையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com