விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டம்: தகவல்கள் உடனுக்குடன்

தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
file photo
file photo
Published on
Updated on
2 min read


சென்னை: தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதையடுத்து, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை. பல முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இரு சக்கர வாகனங்களும், பேருந்துகளும் மட்டுமே இயங்குகின்றன.

இந்த நிலையில், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அவை உடனுக்குடன் இங்கே...

12.10: திருவண்ணாமலை: செங்கத்தில் பேரணியாகச் சென்ற செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

12.00: முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கன்னியாகுமரிக்கு வரும் கேரள பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டன. தமிழக - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கேரள பேருந்துகள் நிறுத்தப்பட்ட

11.50: சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகளை அடைக்கக் கட்டாயப்படுத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பணிமனைகளில் போலிசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக  டாக்சி, ஆட்டோகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

11.40 : அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சையில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

11.30: சென்னை அண்ணாசாலையில் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பொன்முடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

10.40: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டம்.

திருவண்ணாமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.வ.வேலு உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

10.10: சென்னை எழும்பூரில் ஆதித்தனார் மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திருநாவுக்கரசர், கி. வீரமணி, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

திருவாரூரில் பேரணி நடந்தது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அக்கறை காட்டும் அரசு, விவசாயிகளின் நலனைக் காக்கத் தவறி விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com