/

அதிமுக பொதுச்செயலர் பதவியிலிருந்து சசிகலா அதிரடியாக நீக்கப்படுகிறாரா?

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பொதுச்செயலர் பதவி

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:42 pm

DIN

சென்னை: அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பொதுச்செயலர் பதவி என்பது ரத்து செய்யப்பட உள்ளதாகவும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இணைப்புக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று நண்பகல் 12 மணிக்கு பன்னீர்செல்வம் வருகிறார். அவரை அமைச்சர்கள் அழைத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேராக தலைமை அலுவலகம் வந்துவிடுகிறார். இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து அறிவிப்புகளை கூட்டாக வெளியிடுகிறார்கள்.

கட்சியின் முக்கிய ஆலோசனைகளுக்கு பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர். அங்கு அவருக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மதுசூதனன், ஓபிஎஸ் அதிமுக அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனன் இக்கூட்டத்துக்கு தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பன்னீர் செல்வம் அணியில் உள்ள 2 பேர் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது.

மேலும், கட்சியின் வழிக்காட்டு குழு தலைவர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு தரப்படுகிறது. இதற்கு வசதியாக பொதுச் செயலாளர் என்ற பதிவிலிருந்தும் அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கவும் அந்த பதவியை ரத்து செய்யப்பட்டுவதுடன் அந்த அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வத்திற்கு தரவும் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இரு அணிகள் இல்லாத நிலை உருவாகும்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டு, அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதிமுக அணிகள் இணைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து அக்கட்சி தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக அணிகள் இணைகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து தொண்டர்களும் தலைமை அலுவலகத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

அணிகள் இணைப்புக்கு பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் என அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அணிகள் இணைய உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் நிகழலாம் என்பதால், மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.