
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மேலாண் இயக்குநர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்பட 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அந்தந்த போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர்கள் மேற்கொண்டு தேவையான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
காலிப் பணியிடங்கள்: இதற்கிடையே இரு போக்குவரத்துக் கழகங்களில் மேலாண் இயக்குநரின் பதவி காலியாக உள்ளது. அந்த இடம் இதுவரை நிரப்பப்படாமல் அருகில் உள்ள போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கூடுதல் பொறுப்பேற்று கவனித்து வரும் நிலை உள்ளது. இதனால், அவற்றில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும், முடிவுகளை எடுப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
அதே நேரத்தில், தற்போது மேலாண் இயக்குநர்களாக இருப்பவர்கள் நிர்வாக ரீதியிலான முடிவுகள் ஒரு சில காரணங்களால் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இதர துறைகளைப் போல் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை மேலாண் இயக்குநர்களாக நியமிப்பது நிர்வாக சீர்திருத்தப் பணிகளை சுயமாக மேற்கொள்வதற்கு ஒரு தீர்வாக அமையும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
8 மாதங்களாக காலிப்பணியிடம்: இது தொடர்பாக மேலும் அவர்கள் கூறியது:
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கோவை போக்குவரத்துக் கழகத்தில் இருந்த மேலாண் இயக்குநர்கள் ஓய்வு பெற்று 8 மாதங்களைக் கடந்த நிலையில் இன்னும் அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
கோவை போக்குவரத்துக் கழகத்தை சேலம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் பணியை சென்னை தரமணியில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் (ஐஆர்டி) மேலாண் இயக்குநரும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய மேலாண் இயக்குநர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். வரும் 2018-ம் ஆண்டில் மேலும் சில போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் கூறியது:
காலியாக உள்ள மேலாண் இயக்குநர் பணியிடங்களை நிரப்ப அரசு முயற்சி மேற்கொண்டாலும், நிர்வாக ரீதியில் முடிவுகளை எடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் பதவி உயர்வு அடிப்படையில் அப்பணிக்கு வர மூத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
தயக்கம் ஏன்?
தற்போது அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மேலும் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகை, தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள நிலையில், அதை நிர்வாக ரீதியில் தீர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
அதோடு பேருந்துகளுக்குத் தேவையான டயர், உதிரி பாகங்கள் போன்றவற்றை வாங்குவது, ஊழியர்களின் நலனை பேணுதல் உள்ளிட்டப் பணிகளில் சுயமாக எந்த முடியும் எடுக்க முடியாத நிலை உள்ளதும் காரணம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.