வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வாழ்வாதாரமின்றி தவிக்கும் இருளர் சமூக மக்கள்

கடலூர் மாவட்டம், சி.மானம்பாடி ஊராட்சியில் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் வாழ்வாதாரமின்றி பல ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றனர்.

News image
Updated On :11 டிசம்பர் 2017, 3:09 am

ச.முத்துக்குமாா்

கடலூர் மாவட்டம், சி.மானம்பாடி ஊராட்சியில் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் வாழ்வாதாரமின்றி பல ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றனர்.

சிதம்பரம் வட்டத்துக்கு உள்பட்டது சி.மானம்பாடி கிராமம். பரங்கிப்பேட்டை- சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கும், பொன்னந்திட்டுக்கும் இடையே உள்ள காட்டு வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்துச் சென்றால் ஒரு மணல் மேட்டினை அடையலாம். சி.மானம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட இந்தப் பகுதியில் மிகச் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, 26 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் உள்ளனர்.

அரசின் எந்தவித உதவிகளும் கிடைக்கப் பெறாத இவர்கள், பிற சமூகத்தினரின் அலட்சியம், வெறுப்பான அணுகுமுறையின் காரணமாக, வெளி உலகுக்கு தங்களைக் காட்டிக் கொள்வதற்கே வெட்கப்படும் நிலையில் உள்ளனர். இவர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் வசித்து வந்தபோதிலும், நிலையான முகவரி கிடையாது.

அந்தப் பகுதியில் செல்லும் உப்பு ஆற்றில் எவ்வித உபகரணமும் இல்லாமல் கைகளால் தடவியபடியே மீன், இறால்களை பிடிக்கின்றனர். அவற்றை, அந்தப் பகுதியிலுள்ள கிராமங்களில் சொற்ப விலைக்கு விற்று, அந்தத் தொகையைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு இருவேளை உணவு கிடைப்பதே அவர்களுக்கு அரிதாக உள்ளது.

மழைக் காலங்களில் ஓடையில் தண்ணீர் அதிகமாகச் சென்றால், மீன்பிடி பணி பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு மட்டுமல்ல, பிரசவத்துக்குக் கூட மருத்துவமனைக்கு செல்லாதவர்களே இங்கு அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அந்தப் பகுதியில் தேங்கியிருக்கும் குட்டையிலிருந்து தண்ணஈரைப் பிடித்து அதனை வடிகட்டி குடித்து வருகின்றனர். இந்தக் குட்டையே அங்குள்ள விலங்குகளுக்கும் குடிநீராகும்.

குடியிருக்க நல்ல வீடு இல்லை; அடுத்தவேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை; குழந்தைகளுக்கு கல்வி இல்லை; சுகாதார வசதிகள் இல்லாத இக்கட்டான நிலையில் வாழ்ந்து வரும் இந்த மக்கள் அரசின் பார்வை தங்கள் மீது விழாதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.பூராசாமி கூறியதாவது:
இந்தப் பகுதியினர் தங்க இடம் இல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து துரத்தப்பட்டு, காட்டுக்குள் தனியார் இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். பாலியல் தொந்தரவு, வன்முறைக்கும் உள்ளாகி வருகின்றனர். இங்கு வசிக்கும் 105 பேரில் 15 பேர் கைக் குழந்தைகள். இவர்களுக்கு எந்தவித மருத்துவ வசதியும் கிடையாது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்களை பல்வேறு நண்பர்களின் உதவியுடன் படிக்க வைத்து வருகிறோம். இங்கு இறப்போரின் சடலத்தை 3 நாள்களுக்குப் பின்னர் வேறு ஒரு ஊரிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யும் நிலையே நிலவி வருகிறது. எனவே, இவர்களுக்கு குடியிருக்க நிலம் ஒதுக்கீடு செய்து, நிலையான வருமானம் கிடைக்கவும், குழந்தைகள் கல்வி கற்கவும் உரிய ஏற்பாடு செய்துதர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.