
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை விடியோ வெளியிட்டு சசிகலா குடும்பத்தினர் என்ன சதி செய்தாலும் அதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட விடியோவை, டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த விடியோ வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது ஜெயலலிதா சிகிச்சை விடியோவினை வெளியிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் புதனன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அது தனது விசாரணையினைத் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட விடியோவை, டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.
நாளை ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தினகரன் தரப்பு உள்நோக்கத்துடன் இந்த விடியோவினை வெளியிட்டுள்ளது. ஒரு முக்கியமான மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக உங்கள் வசம் உள்ள ஆதாரங்கள் எதுவாக இருந்தாலும் அதனை ஆணையத்தின் வசம் ஒப்படைத்து செயல்படுவதே மரபு. ஆனால் வெற்றிவேல் தன்னிச்சையாகத் தவறான எண்ணத்துடன் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த விடியோ தொடர்பாக இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக ஒரு மாநிலத்தின் முதலைமைச்சராக, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புடன் இருக்கும் ஒருவர் சிகிச்சை பெறும் அறையில், விதிமுறைகளை மீறி வெற்றிவேல் எவ்வாறு விடியோ எடுத்தார்? அல்லது அவருக்கு இந்த விடியோ எப்படி கிடைத்தது? இரண்டாவதாக ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனவே இந்த விடியோ எப்பொழுது எங்கே எடுக்கப்பட்டது என்ற உண்மை தெரிய வேண்டும்.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வெற்றிவேலின் செயல் அப்பட்டமான நடத்தை விதிமீறலாகும். எனவே அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும். சிகிச்சை தொடர்பாக மேலும் 14 விடியோக்கள் இருப்பதாக கூறும் வெற்றிவேல் அவற்றை ஏன் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை? இது தொடர்பாக விசாரணை ஆணையம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுதும் சரி, மரணமடைந்த பின்னரும் சரி, சசிகலா குடும்பம்தான் அவருக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. சசிகலா குடும்பத்தினர் என்ன சதி செய்தாலும் அதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.