

சிவகாசியில் இன்று தேசிய அளவிலான பட்டாசு த் தொழில் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என கொல்கொத்தாவைச் சேர்ந்த ஒருவர் தில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதுகுறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள், பட்டாசுத் தொழிலில் நிலையற்ற தன்மை உள்ளதாலும், சுற்றுப்புறச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களித்து மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த டிச. 26 ஆம் தேதியிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 870 பட்டாசு ஆலைகளையும் மூடி காலவரையற்ற போராட்தத்தை அதன் உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய அளவிலான பட்டாசுத் தொழில் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநிங்களிலும் உள்ள பட்டாசு வியாபாரிகள், பட்டாசு தயாரிப்பாளர்கள், லாரி செட் உரிமையாளர்கள் , வேதியியல் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதுபற்றி பட்டாசு தயாரிப்பாளர்களில் ஒருவரான கதிரேசன் கூறியதாவது: இந்தியாவில் தயாராகும் பட்டாசுகள் அனைத்தும் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை விதிகளின் படியே தயாரிக்கப்படுகிறது. முன்னேற்றம் அடைந்துன்ள அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பட்டாசுக்கு எந்த தடையும் கிடையாது.
ஆனால் இங்கு ஒலி, ஒளி மாசு எனக் கூறி பட்டாசை வெடிக்க தடை போடுவது இந்திய கலாசாரத்தை களங்கப்படுத்துவதாகும். விருதுநகர் மாவட்டத்தில் பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்வதில் பட்டாசுத் தொழில் பெரும் பங்காற்றி வருகிறது.
பட்டாசு தொழில் சார்ந்த உபதொழில்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன. அனைத்தையும் பார்த்தால் இத்தொழில் மூலம் ஒருகோடி பேர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். எனவே இத்தொழிலை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை (டிச. 28) நடைபெறுகிறது. இதில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை எதிர்கொள்வது பற்றியும், சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விதிவிலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.