

2ஜி ஏலத்தின் மூலமே ஏழை, எளிய மக்களிடம் தொலைபேசி வசதியை கொண்டு செல்ல முடிந்தது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீலகிரி தொகுதி மக்களை சந்திப்பதற்காக வியாழக்கிழமை உதகை வந்த அவர் சேரிங்கிராஸ் பகுதியில் பேசியதாவது:
மத்திய அரசில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக நான் இருந்தபோது, ஏழை, எளிய மக்கள் இடையே தொலைபேசி வசதியைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலேயே 2ஜி அலைக்கற்றை வசதி கொண்டு வரப்பட்டது. ஆனால், சில ஊடகங்கள், பத்திரிகைகளின் துணையுடன் 2ஜி ஏலத்தில் முறைகேடு நடந்ததாக சித்திரிக்கப்பட்டது.
7 ஆண்டுகளாக சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ள சூழலில் ஆட்சி இழப்புக்கு காரணமாக இருந்த வழக்கே மீண்டும் ஆட்சியை கொண்டு வரும் என்றார்.
முன்னதாக, மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்த ஆ.ராசாவுக்கு மாவட்ட பொறியார் அணி சார்பிலும், மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் 25 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி வரவேற்பு வழங்கப்பட்டது.
திமுக மாவட்ட செயலர்கள் சிஆர் ராமச்சந்திரன் (கோவை வடக்கு), முபாரக் (நீலகிரி) முன்னாள் அமைச்சர் ராமசந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டிஆர் சண்முகசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஸ்ரப் அலி, காரமடை ஒன்றிய செயலர் எஸ்எம்டி கல்யாணசுந்தரம், மாவட்ட சிறுபான்மை நலஉரிமை பிரிவு அமைப்பாளர் உசேன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.