எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வடகிழக்குப் பருவமழை பாதிப்பு: சென்னையில் மத்தியக் குழு ஆய்வு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

News image
சென்னை நாராயணபுரம் ஏரியில், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிடும் மத்தியக் குழுவினர்.
Updated On :28 டிசம்பர் 2017, 8:01 pm

DIN

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பு, ஒக்கி புயல் சேதம் ஆகியவற்றைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சஞ்சீவ் குமார் ஜின்டால் தலைமையில் மத்தியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இரண்டு பிரிவுகளாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு குழுவும், மற்றொரு குழு கன்னியாகுமரியிலும் ஆய்வுப் பணிகளை வியாழக்கிழமை மேற்கொண்டது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய நிதித் துறையின் செலவினப் பிரிவின் இணை இயக்குநர் முகேஷ்குமார், மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மூத்த ஆலோசகர் எஸ்.சி.சர்மா, கோவையில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர் (கண்காணிப்பு) ஜி.நாக மோகன் 
உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இதன்பின், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இக்குழுவினர் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சென்னை நகரில் ஆய்வு: பெருநகர சென்னை மாநகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். முதலில் ராயபுரம் பகுதியிலும், அதைத் தொடர்ந்து பேசின்பிரிட்ஜ் துணை மின்நிலைய சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி ஜெர்மையா சாலை, ஸ்டீபன்சன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, அண்ணா நகர் 3 -வது நிழற்சாலை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
பலத்த மழையின்போது, தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளும், தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், வெள்ளம் வடிந்ததும் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் உள்ளிட்டவை குறித்து மத்திய குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் 
விளக்கினர். இதுதொடர்பான ஆதாரங்களை விடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக ஆய்வுக் குழுவினரிடம் காண்பித்தனர். 
பொதுமக்கள் புகார்: ஆய்வுக் குழுவினரிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த 2015 -ஆம் ஆண்டு பெய்த கனமழை, 2016-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வர்தா புயல், கடந்த மாதம் பெய்த கனமழையால் சென்னையின் தாழ்வானப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மழை, புயல் காலங்களில் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு உள்கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளும், விதிமீறல்களுமே காரணம். இதனால் மழை, புயல் காலங்களில் ஏழை மக்களின் வாழ்வாதாரமும், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர். ஆய்வுக் குழுவினருடன், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் தா. கார்த்திகேயன், துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்த்ராவ் உள்ளிட்டோர் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாம்பரத்தை அடுத்த தர்கா சாலை, பெருங்களத்தூர் ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடையார் ஆற்றை அகலப்படுத்தும் பணிகளை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சிகள் மூலம் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளையும், வரதராஜபுரம், ஸ்ரீராம் நகர், முடிச்சூர், பெருங்களத்தூர், அமுதம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்ட புகைப்படங்களைக் காண்பித்து, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எடுத்துரைத்தார்.
இதையடுத்து, முடிச்சூர் அமுதம் நகரில் ரூ.1.24 கோடி செலவில் புதிதாக 5 கூடுதல் சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருவதை குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், தாம்பரம் நகராட்சியைச் சேர்ந்த முடிச்சூர் கிருஷ்ணா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். பின்னர், கீழ்கட்டளை சந்திப்பில் உபரிநீர் ஆறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டு வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் குழுவினர் பார்வையிட்டனர். ஆய்வின் போது, வருவாய்த் துறை செயலர் சந்திரமோகன், உணவுப் பாதுகாப்பு ஆணையர் பி.அமுதா, பேரிடர் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திரத்தினம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.