கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

2022-க்குள் அனைவருக்கும் சொந்த வீடு சாத்தியமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அது இன்றைய காலத்தில் சாத்தியமாகுமா என்பது பலர் மனதில் கேள்விக்குறியாகவே உள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:23 pm

கே. ஆனந்தபிரபு

சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அது இன்றைய காலத்தில் சாத்தியமாகுமா என்பது பலர் மனதில் கேள்விக்குறியாகவே உள்ளது.

130 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களில் அனைவருக்கும் சொந்த வீடு சாத்தியமா? என்ற நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைவருக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி செய்து தரப்படும் என திட்டமிட்டு அதைச் செயல்படுத்தி வருகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 31.2 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். அதிலும் வேலைவாய்ப்புக்காக கிராமத்திலிருந்து நகர்ப்புறத்தை நோக்கி புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் வீடுகள் இல்லாமல் உள்ளனர். இதில் அமைப்புசாரா தொழிலாளர்களும், படித்த இளைஞர்களும் வேலை வாய்ப்புத் தேடி நகரங்களிலேயே தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அப்படியே வேலை கிடைத்தாலும் இவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியளவு தங்கும் இடத்திற்கான வாடகைக்கே செலவழிக்க நேரிடுகிறது. இதன் காரணமாக தாங்கள் சொந்த வீடு வாங்கினால் என்ன? என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் ஏற்படுகின்றது. வளர்ந்த நாடுகளில் மக்கள் சொந்த வீடு வாங்க அல்லது கட்ட நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் அளவுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த அளவு வெறும் 9 சதவீதம்தான். வீட்டு வசதி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக விளங்குகிறது.
இது குறித்து தனியார் நிறுவன கட்டுமான நிர்வாகி என்.சங்கர் கூறியது: 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற மிகப்பெரிய திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் ஆர்வத்தோடு இணைவதற்கு சிறிது காலம் ஆகும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் நாடுமுழுவதும் பல லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. குறைந்த வருவாய் பிரிவினருக்கு அதிக வீடுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கம் இந்தத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது. தனியார் துறையினரிடம் வீடு வாங்கினாலும் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் ரூ.2.65 லட்சம் வரை மானியம் பெற்றுக்கொள்ளலாம். தனியார் துறையினரின் ஈடுபாடு அதிகரிக்குமானால் இந்தத் திட்டம் அதிவேகமாக வளர்ச்சி பெற்று குறித்த காலத்திற்குள் மத்திய அரசின் இலக்கை அடைய முடியும் என்றார் சங்கர்.
வருவாயில் 35% வீட்டுத் தவணைக்கு: கடன் வாங்கி சொந்த வீடு கட்டும்போது மாத வருவாயில் 35% மாதத் தவணை கட்ட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில்தான் அதிக வீடுகள்: 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பெரும் அளவில் நிதி வழங்கி வருவதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தமிழகத்திற்கு சுமார் ரூ. 3,482 கோடி வழங்கியிருக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மத்திய அரசு நிதி உதவியுடன் மிக அதிக எண்ணிக்கையிலான வீடுகள் அதாவது 2 லட்சத்து 27 ஆயிரத்து 956 வீடுகள் கட்டப்பட்டு வருகிறன்றன. இந்த திட்டத்தை 2019-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற கேரளம், ஹிமாசலம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வீடு இல்லாதவர்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டுக்குள் 2008 நகரம் மற்றும் மாநகரங்களில் சுமார் 18 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.96 ஆயிரத்து 266 கோடி முதலீட்டை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் நிதியுதவியாக மாநிலங்களுக்கு ரூ.27 ஆயிரத்து 883 கோடி வழங்க ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது. ரூ.18 லட்சம் ஆண்டு வருமானமுள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கும் இந்தத் திட்டத்தில் பயன் அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசு நிதியுதவியுடன் இதுவரை 5 லட்சத்து 83 ஆயிரத்து 427 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 22 மாதங்களில் 97 ஆயிரத்து 489 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 956 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு 86,132 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 8382 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என புள்ளி விவரம் கூறுகிறது.
யாருக்கு இது பொருந்தும்...? : வீடு வாங்க வேண்டும், அல்லது கட்ட வேண்டும் என விரும்பும் அனைவரும் மத்திய அரசின் மானியத்தை பெறலாம். அதாவது மிகக்குறைந்த, குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டு வருவாய் ரூ.6 லட்சம், ரூ.12 முதல் ரூ.18 லட்சம் வரை, அதிகபட்சமாக ரூ.30 லட்சம் ஆண்டு வருவாய் உள்ளவர்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் சொந்த வீடு வாங்கலாம். வீடு வாங்கும்போது அவரது மனைவி அல்லது குடும்பத் தலைவி பெயரில் வாங்க வேண்டும். மிகக்குறைந்த, குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினர் தாய், தந்தை, திருமணமாகாத மகன், மகள் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்தாலும், இதில் மகன், மகள் ஆகியோர் தங்களது பெயரில் சொந்த வீடு வாங்கலாம்.
மேலும் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கூரை வீடு, ஓட்டு வீடு ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ளவும் இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனியார், பொதுத்துறை வங்கிகள், வீடு கட்ட கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதோடு ரூ.2.65 லட்சம் மானியமாகப் பெறலாம். இதற்காக பிரத்யேக சான்றுகள் எதுவும் தேவையில்லை, ஆதார் அட்டையின் நகல், சுய சான்றொப்பம் வழங்கினால் போதுமானது என வங்கி அதிகாரிகள் கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.