வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

85% ஒதுக்கீடு ரத்து: ஊரக மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டு விட்டது! ராமதாஸ்

85% இட ஒதுக்கீடு ரத்து என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஊரக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவு சிதைக்கப்பட்டுள்ளது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:26 pm

DIN

85% இட ஒதுக்கீடு ரத்து என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஊரக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவு சிதைக்கப்பட்டுள்ளது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் எது நடக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் அஞ்சிக் கொண்டிருந்ததோ, அது நடந்து விட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கி அரசு பிறப்பித்த ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. இதன்மூலம் ஊரக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவு சிதைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு தொடர்பான விஷயத்தில் சட்டம், சமத்துவம் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவே தோன்றுகிறது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில்,‘‘ ஊரக மாணவர்களின், குறிப்பாக மாநிலப்பாடத்திட்ட மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எதிராக இந்த நீதிமன்றம் இல்லை. அவர்களின் முன்னேற்றத்தில் நீதிமன்றம் அக்கறை கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களின் முன்னேற்றம் சட்டவிரோத முறையில் எட்டப்படும்போது, குறிப்பாக நீட் தேர்வில் தகுதி பெற்ற சமநிலையில் உள்ள ஒரு பிரிவினருக்கு பாகுபாடு இழைக்கப்படும்போது, அவர்கள் நீதிகேட்டு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும்போது இந்த நீதிமன்றம் வாய்மூடி வேடிக்கைப் பார்க்க முடியாது’’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த ஒதுக்கீட்டை மட்டும் தனித்துப் பார்க்கும் போது இக்கருத்து நியாயமானது தான்.

ஆனால், இதை தனித்துப் பார்க்கக்கூடாது. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கப் பட்டதால் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாக கவலைப்படும் நீதிமன்றங்கள்,  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கிராமப்புற, ஏழை மாணவர்கள் நீதி கேட்ட போது, ‘‘அய்யோ, சமத்துவம் பாதிக்கப்படுகிறதே’’ என்று எந்த நீதிமன்றமும் கவலைப்படவில்லை, நீதி வழங்கவில்லை. மாறாக மத்திய அரசு செய்ததே சரி என்று கூறி, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டன.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஓரளவாவது நீதி கிடைக்க வேண்டுமானால் இத்தகைய இட ஒதுக்கீடு மட்டும் தான் ஒரே தீர்வு ஆகும்.  சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அவர்களின் சமுதாய நலனுக்காக மருத்துவர்களையும், கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டியிருப்பதால் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களை ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்து விதிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வேலூரில் உள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரி உயர் சிறப்பு  மருத்துவ மாணவர் சேர்க்கையில் கூட இத்தகைய விதிவிலக்கை பெற்றிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் தேவையை கருத்தில் கொண்டு தனி ஒதுக்கீடு கோர தமிழக அரசுக்கு உரிமையுண்டு. இவற்றை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி 85% ஒதுக்கீட்டுக்கு  அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 15&க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் மட்டுமே வாதிட்டார். அவருக்கு உதவும் வகையில் சமூகநீதியில் அக்கறை கொண்ட  மூத்த வழக்கறிஞர்கள் சிலரை தமிழக அரசு நியமித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2318 மருத்துவ இடங்கள் நிரப்பப் பட்டன. அவற்றில் 2279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிறப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன. இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ள 3377 இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு கிடைக்கும். இது கடந்த ஆண்டை விட 200 மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு பெற்ற இடங்களில் 90 விழுக்காடு இடங்களை இழப்பார்கள். இது எந்த வகையில் நியாயம்?

இத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டது தான். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு இதை ஒரு நிபந்தனையாக முன்வைத்து சாதித்திருக்கலாம். ஆனால், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழக மாணவர் நலனை பினாமி அரசு காவு கொடுத்து விட்டது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. மத்திய அரசுக்கு  அழுத்தம் கொடுத்து நீட் விலக்கு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவது அல்லது, சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி தீர்ப்பை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டில் சிறந்த வழக்கறிஞர்களை  அமர்த்தி வெற்றி பெறுவதன் மூலமோ மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலனை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.