மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: கோவையில் மு.க.ஸ்டாலின் கைது
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சேலத்தில் நடைபெறவிருந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான


நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சேலத்தில் நடைபெறவிருந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை கோவை மாவட்ட காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கக் கோரி திமுக சார்பில் மாநிலம் தழுவிய மனிதச் சங்கிலிப் போராட்டம் வியாழக்கிழமை (ஜூலை 27) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் ஸ்டாலின் வந்தார்.
பின்னர், அவர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் கார் மூலம் சேலம் புறப்பட்டார். மாநகரைக் கடந்து 11 மணி அளவில் கணியூர் சுங்கச் சாவடி செல்லும்போது, அங்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையிலான போலீஸார், ஸ்டாலினின் காரை தடுத்து நிறுத்தி அவரைக் கைது செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.
எதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று ஸ்டாலின் கேட்டதற்கு மாலையில் நடைபெறும் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சேலம் காவல் துறை தெரிவித்திருப்பதற்கான உத்தரவு நகலைக் கொடுத்தனர்.
ஆனால், மாலையில் நடைபெறும் போராட்டத்துக்காக காலையில் எப்படி கைது செய்ய முடியும்? வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அதற்கான ஆணையைக் கொடுங்கள், இல்லாவிட்டால் தடையை மீறிச் செல்ல நேரிடும் என்று ஸ்டாலின் கூறினார்.
சுமார் 20 நிமிடங்கள் காரிலேயே காத்திருந்த நிலையில் திடீரென காரை சுற்றி வளைத்த போலீஸார் ஸ்டாலினை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரை காரில் இருந்து இறக்கி போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது, போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்ட போலீஸ் வாகனத்தின் முன்பு திமுகவினர் படுத்துக்கொண்டு போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மண்டபத்துக்கு ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன், திமுக துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், டி.எம்.செல்வகணபதி, பொங்கலூர் பழனிசாமி, முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேலம் மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் மண்டபத்துக்குச் சென்றனர்.
பின்னர், மற்ற மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்பதற்காகச் செல்லும்படி ஸ்டாலின் கூறியதை அடுத்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.45 மணி அளவில் ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.
ஸ்டாலின் மீது 2 பிரிவுகளில் வழக்கு: கோவையில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாகக் கூடியது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய இரு சட்டப் பிரிவுகளின்கீழ் கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏரியைப் பார்வையிடுவதைத் தடுக்கவே கைது? சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சராயன் ஏரியை அப்பகுதி திமுகவினர் தூர்வாரி சீரமைத்ததாக கூறப்படுகிறது. இந்தக் குளம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினருக்கு அந்த ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏரியின் கரைகளில் அதிமுகவினர் கட்சிக் கொடிகளைக் கட்டி வண்டல் மண் எடுக்கத் தொடங்கினர்.
ஏற்கெனவே, சீரமைக்கப்பட்ட ஏரியின் கரைகளை உடைத்து அதிமுகவினர் மண் எடுப்பதற்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதைக் கண்டித்து, சேலம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க சேலத்துக்கு வியாழக்கிழமை வரும் வழியில் கச்சராயன் ஏரியைப் பார்வையிட இருப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது. இதை அடுத்தே, வியாழக்கிழமை மாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, கோவையில் வைத்து காலையிலேயே ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...