காலாவதி பேருந்துகள்...கடன் சுமையில் போக்குவரத்துக் கழகம்!

தமிழக அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் மின்கலம் பேருந்து, அனைத்துப் பேருந்துகளிலும் சிசிடிவி
காலாவதி பேருந்துகள்...கடன் சுமையில் போக்குவரத்துக் கழகம்!
Updated on
2 min read

தமிழக அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் மின்கலம் பேருந்து, அனைத்துப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா, படுக்கை வசதி, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள், பணமில்லா பரிமாற்றம் என கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் 50 சதவீதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதியானவை என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமிழகத்தில் பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்டு 1972இல் ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது அரசுப் போக்குவரத்துக் கழகம். சென்னை மாநகரில் மட்டும் 3,688 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதர 31 மாவட்டங்களில் 6,916 நகரப் பேருந்துகளும், புறநகர்ப் பேருந்துகளாக 8,561பேருந்துகளும், மலைப் பகுதிகளில் 528 பேருந்துகளும் என மொத்தம் 20,776 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர, உபரியாக 1,757 பேருந்துகள் சேர்த்து 22,533 பேருந்துகள் உள்ளன. நாளொன்றுக்கு 92.55 லட்சம் கி.மீ. தூரம் பேருந்துகள் இயக்கப்பட்டு 2.2 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதன் மூலம், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பேருந்து கட்டண வருவாயாக நாளொன்றுக்கு ரூ.20.74 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதர வகைகளில் ரூ.4.63 கோடி வருவாய் கிடைக்கிறது.
321 பணிமனைகள், 21 தொழிற்கூடங்கள், 23 கூண்டுகட்டும் பிரிவுகள், 18 டயர் புதுப்பிக்கும் கூடங்கள், 48 தரச்சான்று பிரிவுகளுடன் இயங்கும் இந்தப் போக்குவரத்துக் கழகத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 195 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து புதுவை, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநிலங்களுக்குள் 648 பேருந்துகளும், வெளி மாநிலங்களுக்கு 435 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஒரு பேருந்து 5 லட்சம் கி.மீ. தூரம் அல்லது 7 ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகும். ஆனால், தமிழக அரசுப் பேருந்துகளில் 50 சதவீதத்துக்கும் மேலான பேருந்துகள் காலாவதி நிலையிலேயே இயக்கப்படுகின்றன என்கின்றனர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள். மேலும், நகரப் பேருந்து, புறநகர்ப் பேருந்து, விரைவுப் பேருந்து என பாரபட்சமின்றி அனைத்துப் பேருந்துகளும் நடுவழியில் பழுதாகி நிற்பதும், பயணிகள் இறங்கி தள்ளுவதும் வாடிக்கையாக உள்ளது. உதிரி பாகங்கள் பற்றாக்குறை, பேருந்துகளில் இருக்கைகள், மேற்கூரைகள், ஜன்னல் கண்ணாடிகள் இல்லை என பல்வேறு குறைகள் உள்ளன. விபத்து இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி நாள்தோறும் பேருந்துகள் ஜப்தி செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. மேலும், மலைப் பகுதிகளில் வாரத்துக்கு இருமுறை போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு கடனில் சிக்கி தவிக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகம். ஆண்டு பற்றாக்குறையே ரூ.2 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இதனால், பெரும்பாலான கோட்ட அலுவலகங்களில் ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியத்தை கூட வங்கியில் செலுத்த முடியவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கான பணப் பலன்களையும் வழங்க இயலவில்லை. 2016 செப்டம்பரில் அமலுக்கு வர வேண்டிய 13ஆவது ஊதிய பேச்சுவார்த்தை இன்னும் இழுபறி நிலையிலேயே நீடித்து வருகிறது. இத்தகைய அடுக்கடுக்கான இடர்பாடுகளால் அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாது, போக்குவரத்துக் கழகமே தள்ளாடி வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருவது வாடிக்கையாகிவிட்டது
இதுதொடர்பாக, ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன மாநில துணைப் பொதுச் செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் கூறியது: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஆண்டு வருமானம் ரூ.5,300 கோடி ஆக உள்ளது. ஆனால், டீசல் செலவு ரூ.2,100 கோடி, கடனுக்கான வட்டி ரூ.600 கோடி, வரி விகிதம் ரூ.200 கோடி, சுங்கச்சாவடி கட்டணம் ரூ.3.50 கோடி, விபத்து இழப்பீடு ரூ.50 கோடி, ஊழியர்கள் ஊதியம் ரூ.2,400 கோடி கணக்கிட்டால் வரவுக்கும், செலவுக்குமாக பற்றாக்குறை ரூ.1,800 கோடி முதல் ரூ.2 ஆயிரம் கோடி வரை வருகிறது. 1995ஆம் ஆண்டு முதல் 2011 வரை பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் செய்த அரசியலால் போக்குவரத்துக் கழகம் பெரிதும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகமே செலவு செய்துவிட்டது. இப்போது, ஓய்வூதியர்களுக்கு முதல் கட்டமாக ரூ. ஆயிரம் கோடியும், செப்டம்பரில் ரூ.652 கோடியும் தருவதாகக் கூறியுள்ளனர். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கு ரூ.250 கோடி அளித்துள்ளனர். இன்னும் இருமடங்குக்கு மேலான தொகை வரவேண்டியுள்ளது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையும் முடிந்தபாடில்லை என்றார்.

சரிவிலிருந்து மீட்க துரித நடவடிக்கை!

அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சரிவிலிருந்து மீட்க தமிழக அரசானது துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, போக்குவரத்துக் கழக வட்டாரத்தினர் கூறியது:
2011 முதல் 2017 வரையில் கடந்த 6 ஆண்டுகளில் 9,153 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 300 சிற்றுந்துகள் புதிதாக இயக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளுக்கு 208 பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் இலவச பயணச் சீட்டு கட்டணத்தை ஈடு செய்ய 6 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.27,777.80 கோடி அளித்துள்ளது.
2017-18ஆம் ஆண்டுக்கான உயர்வேக டீசலுக்கான மானியமாக ரூ.800 கோடியை அரசு வழங்கியுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் கேரளம், ஆந்திரத்தில் 3 முறையும், கர்நாடகத்தில் 4 முறையும் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. தமிழக மக்களுக்கான சேவை அடிப்படையில் இயங்கும் போக்குவரத்துக் கழகத்தின் சரிவை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊதியப் பேச்சுவார்த்தையும் விரைந்து இறுதி செய்யப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com