சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ராகுல்காந்தி ஞாயிற்றுக்கிழமை பேசியது: ஹோட்டலில் தங்கியிருந்தபோது என் சகோதரிக்கு (பிரியங்கா) தமிழ் மக்களை நேசிக்கிறேன் என ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். அதற்கு நானும் அவர்களை நேசிக்கிறேன் என்று பதில் வந்தது.
நீடிக்கும் உறவு: தமிழக மக்களுக்கும் எங்கள் குடும்பத்துக்குமான நெருக்கத்தை யோசித்துப் பார்த்தேன். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, நான் என அந்த உறவு நீடிக்கிறது. இது, நேசத்தைத் தாண்டிய பிணைப்பு.
தமிழர்கள் மிகுந்த மரியாதைக்குரியவர்கள். இனி, தமிழ் திரைப்படங்களைப் பார்ப்பது என முடிவு எடுத்துள்ளேன். அதன் மூலம் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் அறிய முடியும் என நினைக்கிறேன். அடுத்த முறை நான் தமிழகம் வரும்போது, நான் அடைந்த பலனை நீங்கள் காண முடியும்.
தமிழின் தனித்துவம்: தமிழ் கலாசாரம் முற்றிலும் மாறுபாடானது. பிற மொழிகளைப் போல தமிழ் வேறொரு மொழியில் இருந்து தோன்றியது இல்லை. தமிழ் மொழியின் மூலம் தமிழ்தான். தமிழ் மக்களுக்கு உணவு, கலாசாரம் என எல்லாம் தனித்துவமானவை.
ஆனால், பாஜக, ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய ஒற்றைக் கருத்தாக்கத்தை நாடு முழுவதும் பரவலாக்கம் செய்ய முயற்சி செய்கிறது. ஒரு தேசம், ஒரு தலைவர் என்பதுதான் பாஜகவின் குரலாக இருந்து வருகிறது. இப்படி குறிக்கப்படுவது இந்தியாவாக இருக்க முடியாது.
இந்தியாவில் பல்வேறு கலாசார மக்கள் வாழ்கின்றனர். இதனை பாஜக உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் அறிந்தது எல்லாம் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம்தான். அங்குள்ள ஓர் அறையில் எடுக்கும் முடிவின்படியே நாட்டை வழிநடத்த நினைக்கின்றனர். பிரதமர் மோடி பேசுவதை கடவுள் பேசுவதாக நினைக்கின்றனர். பகவத் கீதை, உபநிஷங்களை நானும் படித்திருக்கிறேன். உபநிஷதங்கள் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகின்றன. நீங்கள் ஏன் மக்களைப் பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று சில நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதை அவர்கள் புரிந்துகொண்டதாக இல்லை.
காங்கிரஸூக்கு வாய்ப்பு: தமிழகத்தின் தற்போதைய அரசியலை நானும் அறிவேன். திமுக அல்லது அதிமுக என்பது உங்களின் எண்ணமாக இருக்கலாம். என்னைப் பொருத்தவரையில் தமிழகம் முழுவதும் தற்போது குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது. இளைஞர்கள் எதிர்கால அரசியல் தொடர்பாக முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். இது காங்கிரஸூக்குச் சரியான வாய்ப்பு என்று கருதுகிறேன். இந்த வாய்ப்பை காங்கிரஸார் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேவை ஒற்றுமை: கட்சியின் மூத்த தலைவர்களுக்குள் ஒற்றுமை நிலவ வேண்டும். கட்சிகளுக்குள் நடைபெறும் பிரச்னைகளை வெளியில் சென்று செய்தியாளர்களிடம் கூறக் கூடாது. மூத்த தலைவர்கள் மக்களிடம் இருந்து விலகி இருக்காமல் அனைவரும் கிராமங்களுக்குச் சென்று ஏழை மக்களைச் சந்தித்து அவர்களோடு பேச வேண்டும். குறைந்தபட்சம் நாலு பேரிடமாவது தொடர்பில் இருக்க வேண்டும். நாலு பேர் காங்கிரஸாரோடு தொடர்பில் இருக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்தப் பணிகளுக்காக என்னை அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன்.
காங்கிரஸார் புலி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஆலோசிக்க என் வீட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும். காங்கிரஸார் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் பலப்படும்.
பாஜகவினர் பசுவைத் தேசிய விலங்காக்க முயற்சிக்கின்றனர். நீங்கள் எல்லாம் புலிகளைப் போன்றவர்கள். காங்கிரஸார் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
பிற கட்சிகள் குறித்து கவலை வேண்டாம்: அதிமுக என்ன செய்கிறது. திமுக, பாஜக, பாமக என்ன செய்கிறது என்று கவலைப்படாதீர்கள். காங்கிரஸூம் செயல்படலாம். உங்கள் பணியைச் செய்யுங்கள் என்றார்.