பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நீட் தேர்வில் விலக்கு உண்டா, இல்லையா?: அதிமுக - திமுக கடும் விவாதம்

நீட் தேர்வில் தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பாக திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூன் 2017, 8:12 pm

DIN

நீட் தேர்வில் தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பாக திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியது: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால், பிளஸ் 2 படித்தாலும் தகுதி இல்லை என நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு ஒரே நாளில் அறிவித்துவிட்டது. பிளஸ் 2 படித்த ஒருவர் பி.எஸ்சி., வேதியியல் படிக்க முடியும். மேலும் அவர் எம்.எஸ்சி., முடித்து, பி.ஹெச்டி முடித்து புதிய மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும்.
உயிர் காக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கும் ஒருவருக்கு பிளஸ் 2 தேர்வு தகுதியாக உள்ளது. அதே மருந்தை எழுதிக் கொடுக்கும் மருத்துவருக்கு நீட் தேர்வு வேண்டும் என்கிறது. இது சரியான அணுகுமுறையா? நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே, நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு இன்னும் செல்லவே இல்லை என்ற தகவல் வருகிறது என்றார்.
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்: நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்த நிமிஷம் வரை அரசு உறுதியாக உள்ளது.
நீட் தேர்வில் விலக்கு பெற தமிழகச் சட்டப்பேரவையில் 2 மசோதாக்களை ஒரு மனதாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். மத்திய அரசின் இந்த மசோதா உள்துறையின் சட்டப்பிரிவு வாயிலாகப் பரிசீலிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குச் செல்லும். மத்திய சுகாதாரத் துறை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய இரண்டு துறைகளிலும் கருத்துகள் சாதகமாக இருந்தால் விலக்கு அளிக்கப்படும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். நானும், அதிகாரிகளும் தில்லிக்கு மத்திய அமைச்சர்களை நேரில் சென்று வலியுறுத்தினோம். ஆனால், இரண்டு துறைகளும் சாதகமான பதிலை அளிக்கவில்லை.
எனினும், முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் தற்போது மத்திய உள்துறை, சட்டத்துறையிடம் உள்ளது. அவர்கள் இன்னும் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பவில்லை. இதுதான் நிலை. இப்போதுகூட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டியதற்கான சில விளக்கங்களைக் கேட்டனர். அதற்கும் விளக்கம் அளித்துள்ளோம்.
அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் 3,677 மாணவர்கள் மிகக் குறைந்த அளவே பணம் செலுத்தி படிக்கக் கூடிய இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குத்தான் விலக்கு கேட்டுப் போராடி வருகிறோம்.
உள்ஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும், கிராமப்புற மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம். ஒரு விகிதாச்சார முறையில், உள் ஒதுக்கீடு போன்ற நிலையை எடுக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கிறோம் என்றார்
இதே விவகாரத்தை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போதும் பொன்முடி எழுப்பினார். அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்சொன்ன பதிலையே அளித்தார்.
அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து கூறியது:
நீங்கள் சொல்வது அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், நோயாளி இறந்துவிட்டார் என்பதுபோல இருக்கிறது. நீட் தேர்வில் மத்திய அரசுடன் முட்டி மோதி இந்த நேரம் விலக்கு பெற்றிருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் அங்கு அல்லவா இருந்து நீங்கள் பணிகளை ஆற்ற வேண்டும் என்றார்.
அமைச்சர் தங்கமணி: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வேகமாகப் பேசுகிறார். மத்திய அரசில் இடம்பெற்றிருந்த நீங்கள் காங்கிரஸ் அரசோடு மோதி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். இல்லையா?
அமைச்சர் சி.வி.சண்முகம்: நீட் தேர்வுக்கான அறிவிக்கை காங்கிரஸ் ஆட்சியில்தான் வெளியிடப்பட்டது. அப்போதே திமுக தடுத்திருக்கலாம். இல்லையா?
துரைமுருகன்: எங்களால் முடியவில்லை என்பதால்தான் உங்களை ஆட்சியில் மக்கள் அமர்த்தியுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.