ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

3 எம்.எல்.ஏ.க்கள் கைது விவகாரம்: மு.க.ஸ்டாலின் - விஜயபாஸ்கர் விவாதம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்குச் செல்ல இருந்த திமுகவின் 3 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சுகாதாரத் துறை

News image
Updated On :20 ஜூன் 2017, 9:54 pm

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்குச் செல்ல இருந்த திமுகவின் 3 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் ஆலங்குடி திமுக உறுப்பினர் மெய்யநாதன் பேசும்போது, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அதற்கு நிதி ஒதுக்கியவர் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டுக் கூறியது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான். இதற்காக திமுக ஆட்சியில் சிறு துரும்பைக்கூட போடவில்லை. 5 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதாக மட்டும் அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்தத் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டது. அதனால், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு திமுகவினர் உரிமை கொண்டாட முடியாது.
மு.க.ஸ்டாலின்: புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு 2011 பிப்ரவரி 26-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைய தலைமைச் செயலாளர் உள்பட பல்வேறு அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆகவே, அடிக்கல் நாட்டப்பட்டது என்பது உண்மை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நான் அன்றைக்குத் தெரிவித்ததும் உண்மை.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அதை கிடப்பிலே போட்டது. அதன் பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா 110-ஆவது விதியின் கீழ் புதுக்கோட்டையில் கல்லூரி கட்டப் போவதாக அறிவித்தபோது அப்போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.
எனவே, அடிக்கல் நாட்டு விழாவுடன் திட்டம் தீட்டியது திமுகதான்.
செயல்படுத்தியது அதிமுகவாக இருக்கலாம். ஆனால், திமுகவின் 3 உறுப்பினர்களை விழாவுக்கு வருமாறு அமைச்சர் தொலைபேசியில் அழைத்துவிட்டு, வரும்போது அவர்களைக் கைது செய்தனர். இது கண்டிக்கத்தக்கது.
விஜயபாஸ்கர்: புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவின்போது 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் பெயரை அழைப்பிதழில் போட்டிருந்தோம். அவர்களை நானும் தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று திமுக முடிவு செய்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கூறியதை நானே தொலைக்காட்சியில் பார்த்தேன்.
மு.க.ஸ்டாலின்: ஆர்ப்பாட்டத்தின்போது நான் அப்படி பேசியது உண்மைதான். ஆனால் விழாவுக்கு அழைக்காவிட்டால், முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டும் திமுகவில் முடிவு எடுத்திருந்ததாகத்தான் பேசினேன். ஆனால், விழாவுக்கு அழைக்கப்பட்டதால், கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியமே எழவில்லை. விழாவில் பங்கு பெற இருந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் பேச வாய்ப்பு கிடைத்தால் உங்கள் தொகுதி பிரச்னை பற்றிப் பேசுங்கள் என்று கூறி இருந்தேன்.
விஜயபாஸ்கர்: முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்ட இருந்ததால்தான் காவல் துறையினர் எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின்: திமுக எம்.எல்.ஏ.க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றால், புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி வருவதற்கு திமுகதான் காரணம் என்று பேசி விடுவார்கள் என்பதற்காகவும் தொகுதி பிரச்னையைப் பேசிவிடுவார்கள் என்பதற்காகவுமே கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு பேரவையில் விவாதம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.