மெரீனாவில் போராட்டம் நடத்தப் போவதாகத் தகவல்: போலீஸ் குவிப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் பரவியதால், அங்கு பாதுகாப்பு பல
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் பரவியதால், அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பல லட்சம் பேர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் நிறைவேற்றியது. அதன் பின்னர் போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட பிரச்னையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தச் சூழ்நிலைக்குப் பின்னர், மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறை கருதியதால், அங்கு 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர், இந்தத் தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதேவேளையில், மெரீனாவில் அனுமதியின்றிப் போராட்டம், பேரணி, நிகழ்ச்சிகள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதுபோலவும், அவர்கள் மாணவர்களையும், இளைஞர்களையும் போராட்டத்துக்கு அழைப்பதுபோலவும் விடியோ காட்சி முகநூலில் செவ்வாய்க்கிழமை காலை பரவியது. இதனால், மெரீனாவை நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு வருவதாகத் தகவல் வெளியானது.

இதன் அடிப்படையில், மெரீனாவில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சுமார் 500 போலீஸார் குவிக்கப்பட்டனர். மயிலாப்பூர் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 மேலும் போலீஸார், மெரீனா கடற்கரை முழுவதும் ரோந்துப் பணியிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர். சந்தேகத்துக்குரிய வகையில் மெரீனாவில் சுற்றித் திரிந்த சுமார் 10 இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

 நண்பகலில் மணல் பரப்பில் உள்ள கடைகள் போலீஸார் அறிவுறுத்தலின்படி  மூடப்பட்டன. போலீஸார் கெடுபிடியின் காரணமாக, மெரீனாவில் இருந்த பொதுமக்கள் வெளியேறினர். நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து, மாலையில் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல பொதுமக்களும் கடற்கரைக்கு வரத் தொடங்கினர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. கடும் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்கள்  கையெழுத்தாயின.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் சென்னை மெரீனாவில் மாணவர்களும், இளைஞர்களும் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அழைப்பும் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மெரீனாவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக நேற்று முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இன்று சென்னை மெரீனாவில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மெரீனாவில் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்துப்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி நீதிமன்றம் அருகே போராட்டம் நடக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மதுரை தெப்பக்குளத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரீனாவில் போராட்டம் நடைபெறப் போவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாப்பூர் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com