மணல் குவாரிகளை இனி அரசே நடத்தும்: எடப்பாடி கே. பழனிசாமி
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளில் மணல் குவாரிகள் முழுமையாக மூடப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.


தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளில் மணல் குவாரிகள் முழுமையாக மூடப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இருஉயர்மட்டப் பாலங்கள் உள்பட ரூ.53 கோடியில் புதிய கட்டுமானங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்தும், ரூ.1.25 கோடியில் 524 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
தமிழக அரசின் மூலமாக பல்வேறு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளை இனிமேல் அரசே முழுமையாக எடுத்து செயல்படுத்தும்.
மணலை லாரியில் நிரப்புவது, சேமிப்பது இரண்டும் அரசின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும். ஆகவே, மணல் விலை கட்டுப்படுத்தப்படும்.
மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் ஆற்றுப் படுகைகளில் எதிர்காலத்தில் மணல் இல்லாமல் போய்விடும். எனவே அடுத்த 3 ஆண்டுகளில் மணல் எடுப்பது முழுமையாக நிறுத்தப்படும்.
மணல் இருந்தால் தான் நிலத்தடி நீரைச் சேமிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் கட்டுமானத்துறையினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு தற்போது பயன்படுத்தும் மணலை படிப்படியாகக் குறைத்து, செயற்கை மணலுக்கு (Manufactured Sand) மாற வேண்டும்.
தமிழையும், தமிழர்களையும் இரு கண்களாக நினைத்துப் பணியாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், தமிழின் பெயரைச் சொல்லி வளர்ந்தவர்கள், தமிழுக்காக எதையும் செய்யவில்லை. மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தை தங்களது ஆட்சிக் காலத்தில் புறந்தள்ளியதில் இருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம்.
2011-இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு புத்துயிர் கொடுத்து 14.5 ஏக்கரில் ரூ.37.25 கோடியில் பெருந்திட்ட வளாகத்தை மதுரையில் உருவாக்கினார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தமிழ்ப் பற்றையும், அவர் வழியில் வந்த ஜெயலலிதாவின் தமிழ்த் தொண்டையும் நினைத்துப் பார்த்தால், உண்மையான தமிழினத் தலைவர் யார் என்பது தெரியும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி முதல்வர் பணியில் செயலாற்றி வருகிறேன். எனது அனுமதிக்கு வரும் கோப்புகளுக்கு உடனுக்குடன் ஒப்புதல் அளித்து அரசு இயந்திரம் முழு மூச்சில் இயங்கி வருகிறது.
இதைப் பிடிக்காத சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசைக் குறைகூறி வருகின்றனர். அவர்களது கனவு, பகல் கனவாக நிறைவேறாமல் போய்விடும். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களைப் பார்த்துக் கொள்ளும் என்றார்.
மணல் விற்பதால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய்
மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதாலா ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதல்வர் அறிவிப்பு: மணல் குவாரிகளை இனிமேல் அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரையிலும், ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவிலும் வருவாய் கிடைக்கும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கணித்துள்ளன.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
"எம் சாண்ட்' என்றால் என்ன? "எம் சாண்ட்' (Manufactured Sand) என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் மணலாகும். அதாவது கடினமான கிரானைட் போன்ற கற்களைத் தூள் தூளாக்கி அதனை மணல் போல ஆக்கி அதனை கட்டடம் கட்டப் பயன்படுத்தும் மணலே எம் சாண்ட் ஆகும்.
இதைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த "எம் சாண்ட்' மணல் வகை இதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை. ஆற்றுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் குறைக்கப்படும் போது இதனுடைய பயன்பாடு அதிகரிக்கும்.
கடன் சுமை குறையும்: தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ள நிலையில் மணல் விற்பனை மூலம் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தால் கடன் சுமையில் இருந்து ஓரளவு மீள வழி ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...