அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலை வழக்கு: விசாரணை அதிகாரி மாற்றம்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் கே.ஆர்.சுப்ரமணியம் தற்கொலை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.


தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் கே.ஆர்.சுப்ரமணியம் தற்கொலை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.
நாமக்கல்-மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (58). தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான இவர், அரசு ஒப்பந்ததாரராக இருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை சுப்ரமணியம் மேற்கொண்டு வந்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.
இதுதொடர்பாக சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் இருமுறை சுப்ரமணியம் விசாரணைக்கு சென்று வந்துள்ளார். 3ஆவது முறையாக, சுப்ரமணியம் சென்னை வருமான வரித் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் கடந்த 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது விவசாயத் தோட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையின்போது, அவரது வயிற்றில் குருணை மருந்து இருந்ததாக தகவல் வெளியாகியது. இதனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்ததது.
இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் தற்கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சுப்ரமணியம் இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார், கடைசியாக அவரிடம் செல்லிடப்பேசியில் பேசிய நபர்கள் யார் என்பது உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுப்ரமணியம் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுப்ரமணியம் இறப்பு வழக்கில் மோகனூர் காவல் ஆய்வாளர் இளங்கோ நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் புதன்கிழமை மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக உடற்கூறு ஆய்வு அறிக்கை ஒரு வாரத்தில் பெறப்படும். முக்கிய வழக்குகளில் உடனடியாக அறிக்கை பெறப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்படும். சுப்ரமணியம் தற்கொலை செய்துகொண்டு 3 நாள்களாகியும் பரிசோதனை அறிக்கை பெறப்படாமல் உள்ளது.
விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளதால், இனி விரைந்து உடற்கூறு ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, விசாரணை விரைவுபடுத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...