தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் கொடுமை என்னவெனில், 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக, 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம் வகுப்புக்கான பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கி விடுகின்றனர் என்பது தான். இதனால் பல மாணவர்கள் 11-ஆம் வகுப்பை படிக்காமலேயே தேர்ச்சி பெறுகின்றனர். மேல்நிலைக் கல்வியில் பாதியை படிக்காததால், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை அவர்களால் எதிர்கொள்ள இயல வில்லை. 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிமுகம் செய்வதன் மூலம் இப்பாதிப்புகளை தவிர்க்கலாம்.