ரூ.650 கோடியிலான துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடையுமா?

சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டப்பணிகளில் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பத்தில் வசித்து வந்தவர்களுக்கான மறுகுடியமர்த்தல் பிரச்னையில் நீண்ட
துறைமுக இணைப்புச் சாலைகள் விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பத்தில் காலி செய்யப்பட்டதையடுத்து இடிக்கப்பட்டுவரும் வீடுகள்.
துறைமுக இணைப்புச் சாலைகள் விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பத்தில் காலி செய்யப்பட்டதையடுத்து இடிக்கப்பட்டுவரும் வீடுகள்.
Updated on
2 min read

சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டப்பணிகளில் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பத்தில் வசித்து வந்தவர்களுக்கான மறுகுடியமர்த்தல் பிரச்னையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு சுமுகத் தீர்வு ஏற்பட்டுள்ளதையடுத்து இங்கு வசித்து வந்த 446 குடும்பங்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதன்மூலம் இத்திட்டத்தில் இருந்து வந்த முக்கியத் தடங்கல் நீங்கி விடுபட்டிருந்த இடத்தில் மீண்டும் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாலை விரிவாக்க சிறப்புத் திட்டம்: சென்னை, எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் இத்திட்டத்தை ரூ.650 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த சிறப்பு நிறுவனம் அமைக்கப்பட்டது. இதில் இரண்டு துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு ஆகியவை பங்குதாரர்களாக இணைக்கப்பட்டன. எண்ணூர் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை உள்ளிட்ட சாலைகள் ஆறு வழிச்சாலைகளாக நவீன வடிவமைப்பில் அகலப்படுத்துதல், கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள் அமைத்தல், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், பாலங்கள், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
1998-ல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் 2011 ஜனவரியில்தான் திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இத்திட்டத்தில் தற்போது 95 சதவீத பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிந்தபோதிலும் நான்கு இடங்களில் மட்டும் சில பிரச்னைகளால் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் முடங்கியிருந்தது.
நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம்: எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியில் சாலை செல்லும் வழியில் சுமார் 446 மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களுக்கு மாற்று வீடுகள் எர்ணாவூரில் உள்ள சுனாமி மறுவாழ்வு அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் தங்கள் வாழ்விடத்திலிருந்து மாற்றிடம் சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் தங்களது மீன்பிடித் தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி இவர்கள் வீடுகளைக் காலி செய்ய மறுத்து வந்தனர். இது குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து இக்குடியிருப்பு அமைந்துள்ள சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு மட்டும் சாலை விரிவாக்கப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வந்தன.
சுமுகத் தீர்வால் தடை நீங்கியது: இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது. இதன்படி இக்குடியிருப்புக்கு அருகில் எல்லையம்மன் கோயில் தெரு அருகே உள்ள காலி நிலத்தில் தலா ரூ. 10 லட்சம் செலவில் 446 குடும்பங்களுக்கும் அடுக்குமாடி வீடுகள் அமைத்துத் தரப்படும். ஆனால் அதற்குள் சாலை விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக உடனடியாக தற்போதைய வீடுகளைக் காலி செய்ய வேண்டும். மேலும் தலா ரூ.20 ஆயிரம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் செலவுத் தொகையாகவும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக வீடுகளைக் காலி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நீண்ட நாள் பிரச்னைக்குத் தடை நீங்கி தீர்வு காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் விரைவில் சாலை அமைக்கும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதர தடைகள் நீங்குவது எப்போது?: எண்ணூர் விரைவு சாலையில் உள்ள ஜீவ வார்த்தை விடுதலை சபை, முத்துகிருஷ்ணசாமி மடம் ஆகியவற்றை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அகற்றப்படவில்லை. இந்த இரு இடங்களிலும் அணுகு சாலை உட்பட 6 வழிச்சாலைகளில் 3 வழிகளில் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது தவிர காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகப் பகுதியில் சுமார் அமைக்கப்பட வேண்டிய உயர்மட்டப் பாலம், மீன் கடைகளை இடம் மாற்றுவதில் எதிர்ப்புக் காரணமாக முடங்கியுள்ளது.
அனைத்துத் தடங்கல்களையும் நீக்கி முழுமையாக இத்திட்டத்தை நிறைவேற்ற அனைத்து துறை அதிகாரிகளும் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com