பிற கட்சியினரும் நீர் நிலைகளை தூர்வார முன் வரவேண்டும்: மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

திமுகவின் பணிகளை பார்த்த பிறகாவது ஆளும் கட்சியினரும், பிற கட்சியினரும் நீர் நிலைகளை தூர்வார முன் வரவேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளா
பிற கட்சியினரும் நீர் நிலைகளை தூர்வார முன் வரவேண்டும்: மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
Published on
Updated on
2 min read

திமுகவின் பணிகளை பார்த்த பிறகாவது ஆளும் கட்சியினரும், பிற கட்சியினரும் நீர் நிலைகளை தூர்வார முன் வரவேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சோழிங்கநல்லூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் குளங்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
 
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தண்ணீருக்காக தவிக்கும் நிலை இந்த பினாமி ஆட்சியால் உருவாகி இருக்கிறது. எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்ற நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய குளங்களை தூர் எடுக்க வேண்டும் என்று நான் முன் வைத்த வேண்டுகோளை ஏற்று, திமுக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் சிறப்பான வகையில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் செய்திகளை அறிந்து உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தப் பணிகளை எல்லாம் நான் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இன்று சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டு இருக்கக்கூடிய, மூட்டைக்காரன் சாவடி அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்லடம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயசந்திரன் நகர் குடியிருப்பில் இருக்கக்கூடிய குளத்தை தூர் வாரும் பணியையும் பார்வையிட்டுள்ளேன். இந்தப் பணியை பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, குளங்கள் இருக்கக்கூடிய பகுதிகளின் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
 
அப்படிப்பட்ட நிலையில், இந்தப் பணிகளால் திமுகவுக்கு பெருமை கிடைத்து விடும் என்ற காழ்ப்புணர்வோடு, மக்களுக்கு இதனால் பல நன்மைகள் ஏற்படும் என்பதை மறைத்து, மாற்று கட்சியினரும், ஆளும் கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்றைக்கு ஒரு தமிழ் நாளேட்டிலும், இன்று தினமணி நாளேட்டின் தலையங்கத்திலும் செய்திகள் வந்திருக்கின்றன. இந்தப் பணிகளை பாராட்டாவிட்டாலும், விமர்சிக்க வேண்டாம், கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அந்த பத்திரிகைகளில் எழுதி இருப்பதை பார்த்த பிறகாவது, சில அரசியல் தலைவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
 
திமுக ஆளும் கட்சியாக இல்லாமல், எதிர் கட்சியாக இருந்து இந்தப் பணிகளை நிறைவேற்றுகின்ற போது, இதை பார்த்த பிறகாவது ஆளும் கட்சியில் இருப்பவர்களும், பிற கட்சியினரும் தாங்களும் இந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும். இதையே பொதுமக்களும், பத்திரிகைகளும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
 
தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ குளங்களில் தூர் வாருவது போதாது, அணைகளில் தூர் வார வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். எனவே, அவரிடத்தில் இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்.
 
கேள்வி: ஓபிஎஸ்ஸும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்து வருவது அரசியல் காரணங்களுக்காக என்று கூறப்படுகிறதே?
 
பதில்: அரசியல் காரணங்களுக்காகவே சந்தித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, அதிமுகவை இரண்டாக உடைப்பதற்கும், உடைந்த அதிமுகவை ஒன்றாக இணைப்பதற்கும் ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போல பிரதமர் மோடி இந்தப் பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
 
89 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வருமானவரித்துறை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து, அதில் முதல் பெயராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் தான் இடம்பெற்றுள்ளது. பிரதமர் அவரை அழைத்து நேரம் கொடுத்து நேரில் சந்திக்கிறார். மணல் மாஃபியா சேகர் ரெட்டியோடு எல்லா வகையிலும் தொடர்புடைய ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி அழைத்து நேரில் சந்திக்கிறார். ஆனால், தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய திருநாட்டுக்கே முதுகெலும்பாக உள்ள விவசாயப் பெருங்குடி மக்களை சந்திக்க பிரதமருக்கு நேரமில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது.
 
கேள்வி: ஆவின் பாலில் நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே?
 
பதில்: ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் சரி, இப்போதும் சரி கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தின் எல்லா துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் நடந்து வருகின்றன. பல நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
கேள்வி: குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்து இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
 
பதில்: அவர் மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வரும்படி பிரதமரை அழைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இருவரும் மாறி மாறி தெரிவித்து இருக்கிறார்களே தவிர, பிரதமர் மோடி இதற்காக நேரம் ஒதுக்கினால் மட்டுமே இவையெல்லாம் உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும். அவர் இங்கு வந்து புகைப்படத்தை திறந்து வைப்பதாக தெரிவித்த பிறகே அதுபற்றி கருத்து சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com