ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை சில்க்ஸில் பயங்கர தீ விபத்து: 7 மாடி கட்டடம் எரிந்து நாசம்: உயிர் தப்பிய 12 ஊழியர்கள்; புகை மண்டலமான தி.நகர்

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 மாடி கட்டடம் எரிந்து நாசமானது.

News image
சென்னை தியாகராய நகரில் உள்ள 'சென்னை சில்க்ஸ்' துணிக் கடையின் மேல் தளத்தில் எரியும் தீயை ராட்சத கிரேன் உதவியுடன் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.
Updated On :1 ஜூன் 2017, 12:08 am

DIN

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 மாடி கட்டடம் எரிந்து நாசமானது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை தியாகராய நகரில் உஸ்மான் சாலையில் சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் 7 மாடிகளுடன் சென்னை சில்க்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இங்கு தரை தளத்தில் பரிசு பொருள்கள் விற்பனையகமும், பருத்தி ஆடைகள் விற்பனையகமும் இருந்தது.
ஏழு தளங்கள்: முதல் தளத்தில் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனையகம் இருந்தது. மீதி 5 தளங்களிலும் அனைத்து வயதினருக்குமான ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏழாவது தளத்தில் ஊழியர்களுக்கான உணவு விடுதியும், கிட்டங்கியும் செயல்பட்டது.
கீழ்தளத்தில் புகை: இந்த நிலையில், புதன்கிழமை (மே 31) அதிகாலை 4 மணியளவில் கடையின் கீழ்தளத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. தகவலறிந்த தியாகராய நகர், தேனாம்பேட்டை, கிண்டி, எழும்பூர் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆக்கிரமிப்புகள் காரணமாக...எனினும், கடையின் முன்பகுதிக்கு தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாகச் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருந்தன. நிலைமையைச் சமாளித்து கடையின் முன்பகுதிக்கு அவர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவிக் கொண்டிருந்ததால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.
நகரின் பல்வேறு இடங்களிலிருந்து...சென்னை நகரின் பல்வேறு இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு இணை இயக்குநர் சாகுல்ஹமீது சம்பவ இடத்துக்கு வந்து, தீயணைப்புப் பணியை விரைவுபடுத்தினார். அதே சமயத்தில் கடையின் கீழ்தளத்தில் புகை அதிகமாக இருந்ததால், புகையை உறிஞ்சும் கருவி மூலம், அதனை வெளியேற்றும் பணி தொடங்கியது.
மீட்கப்பட்ட 12 ஊழியர்கள்: ஏழாவது தளத்தில் உள்ள உணவு விடுதியில் காலை உணவு தயாரிக்கச் சென்ற 12 ஊழியர்கள், அங்கு சிக்கிக் கொண்டனர். அவர்களை 54 மீட்டர் உயரம் வரை செல்லும் 'ஸ்கை லிப்ட்' மூலம் தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
பொருள்கள் நாசம்: நேரம் செல்ல, செல்ல தீ வேகமாகப் பரவியது. புகை, அதிக வெப்பம் காரணமாக 7 தளங்களிலும் இருந்த பொருள்கள் தீ பிடித்து எரியத் தொடங்கின. கட்டடம் முழுவதும் நான்கு பகுதிகளிலும் காங்கீரிட்டால் அடைக்கப்பட்டிருந்ததாலும், காற்று செல்வதற்கு வேறு வழியில்லாததாலும் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது.
வெடித்துச் சிதறிய கண்ணாடிகள்: புகை வெளியேற வழியில்லாமல் இருந்ததால், அதிக அளவு வெப்பம் ஏற்பட்டு கட்டடத்துக்குள் இருந்த அலங்கார கண்ணாடிகள், டைல்ஸ்கள் வெடித்துச் சிதறின. இதனால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல், வெளியில் இருந்தபடியே தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
சுவர்களில் துளையிட்டு... இதனிடையே, புகையை வெளியேற்றி வெப்பத்தைக் குறைக்கும் வகையில், கட்டடத்தின் பின்புறச் சுவரிலும், பக்கவாட்டு சுவரிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் துளையிட்டனர். ஆனால், காற்று வேகமாக வீசியதால் தீ கட்டடம் முழுவதும் பரவியது.
காங்கிரீட் சுவர் உடைப்பு: தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றபோது, புதன்கிழமை மாலை 4 மணியளவில் கட்டடத்தின் முன்பகுதியில் கண்ணாடிகளை தகர்த்து, அதன் உட்பகுதியில் இருந்த காங்கீரிட் சுவரை உடைத்தனர். அதன் மூலம், புகை வேகமாக வெளியேறியது. இதனால், உஸ்மான் சாலை முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இரவையும் தாண்டி...கடையில் இருந்த அனைத்துப் பொருள்களும் தொடர்ந்து எரிந்ததால், தீயை அணைக்கும் பணி இரவையும் தாண்டி நடைபெற்றது. ராட்சத மின் விளக்குகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியை வீரர்கள் மேற்கொண்டனர்.
இயல்பு நிலை பாதிப்பு: இந்தத் தீ விபத்து காரணமாக உஸ்மான் சாலை மட்டுமின்றி தியாகராய நகர் பகுதி முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அபாயகரமான பகுதியாக அறிவிப்பு: இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை, 'அபாயகரமான பகுதி'யாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்தார். அவர் தீயணைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
200 கடைகள் அடைப்பு:
சென்னை உஸ்மான் சாலை பகுதியில் உள்ள கடைகளின் பாதுகாப்பு கருதி, அவற்றை அடைக்குமாறும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து உஸ்மான் சாலையில் சுமார் 200 கடைகள் புதன்கிழமை (மே 31) முழுவதும் அடைக்கப்பட்டன. அதேபோல உஸ்மான் சாலையில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் ஊழியர்கள்: தீயை அணைக்கும் பணியில் சுமார் 200 தீயணைப்பு படை வீரர்களும், மெட்ரோ ரயில் திட்ட ஊழியர்களும் ஈடுபட்டனர். 20 தீயணைப்பு வண்டிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை அணைக்க குடிநீர் வாரிய நிறுவனத்தின் சுமார் 18 வாகனங்களின் நீர் பயன்படுத்தப்பட்டது.
தங்கம் தப்பியது; வெள்ளி உருகியது
சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த தங்கம் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததால் தீ விபத்திலிருந்து அவை தப்பியதாக போலீஸார் கூறினர்.
இது குறித்த விவரம்: சென்னை சில்க்ஸின் தரைத் தளத்தில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை உள்ளது. இங்கு தங்கம், வைரம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் வெள்ளியை தவிர்த்து, தங்கம், வைரம் ஆகிய நகைகள் தினமும் இரவு வியாபாரம் முடிந்ததும் அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் எடுத்து வைக்கப்படுவது வழக்கம். அதன்படியே செவ்வாய்க்கிழமை இரவும், தங்கம், வைர நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதனால் தீயிலிருந்து அவை தப்பின.
வெள்ளிப் பொருள்கள் மட்டும் அலங்காரப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன. தீ விபத்தில் அங்குள்ள கண்ணாடிகள், டைல்ஸ்கள் வெடித்துச் சிதறியபோது, நகைக் கடையில் இருந்த வெள்ளிப் பொருள்களும் உருகியதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
விதிமுறைகளை மீறியிருந்தால் நடவடிக்கை: அமைச்சர் உறுதி
 விதிமுறை மீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நடைபெறும் பணியை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தீ விபத்து ஏற்பட்டிருக்கும் கட்டடத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா என விசாரணை நடத்தப்படும். விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதும், தவறு நடைபெற்றிருப்பதும் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள அந்த நிறுவனத்தினரே, தீயை அணைக்க ஆகும் அனைத்துச் செலவினங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்டட ஸ்திரத்தன்மை குறித்து பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்வார்கள். கட்டடம் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால், அது இடிக்கப்படும் என்றார் அவர்.
அமைச்சர், அதிகாரிகள் முகாம்: சென்னை சில்க்ஸில் தீ விபத்து கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருப்பது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள்,சென்னை சில்க்ஸின் கட்டடத்தின் பின் பகுதியிலேயே முகாம் அமைத்து, தீயணைப்பு பணியை துரிதப்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், கூடுதல் ஆணையர்கள் கே.சங்கர், அபய்குமார்சிங், இணை ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் காவல்துறை தரப்பில் பங்கேற்றனர். அதேபோல வருவாய்த்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன்,
தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயர்வர்தன் எம்.பி. ஆகியோர் சுமார் 2 மணி நேரம் அங்கு முகாமிட்டு, பணிகளை விரைவுபடுத்தினர். தீ விபத்து மீட்புப் பணியில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மூன்று தாற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மின் கசிவு காரணமா?: தீ விபத்துக்கு காரணம்: காவல் துறை தீ விபத்து ஏற்படுவதற்கு மின் கசிவே காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட தரை கீழ் தளத்தில் அழகு பொருள்கள், சில வகை பருத்தி துணி வகைகள் விற்பனையங்கள் இருந்தன. இதன் அருகிலேயே ஜெனரேட்டர் அறை உள்ளது. அங்கிருந்தே மின்கசிவு ஏற்பட்டு, ஜெனரேட்டர் அறையில் இருந்த பொருள்களும், அங்கிருந்த டீசலும் தீப்பற்றியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.