

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை எடுத்துச் செல்ல வந்த அலுவலர்களையும், வாகனத்தையும் அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வு பணியில் சுமார் 7500 க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில், ஏற்கெனவே சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொருள்கள் பெங்களூருவில் உள்ள இந்திய தொல்லியல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள பொருள்கள் கீழடியில் உள்ள கிராம இ-சேவை மையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் , வியாழக்கிழமை இரவு தொல்லியல் உதவி அலுவலர் வீரராகவன் தலைமையிலான அலுவலர்கள் தொல்லியல் பொருள்களை எடுப்பதற்காக லாரியில் வந்துள்ளனர். இதனை அறிந்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பொருள்களை எடுக்க விடாமல் அலுவலர்களையும், அவர்கள் வந்த வாகனத்தையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்புவனம் வட்டாட்சியர் கமலா,திருப்புவனம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் தலைமையிலான போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர்
பொருள்கள் மீண்டும் சேவை மையத்தில் இறக்கி வைக்கப்பட்டன. அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, தொல்லியல் துறையினரும் பொருள்களை எடுக்காமல் திரும்பிச் சென்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கீழடி இ சேவை மையத்தில் வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருள்களை தொல்லியல் துறையினர் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.