சான்றிதழை அளிக்க கூடுதல் கட்டணம் கேட்ட கல்லூரி: ஆட்சியர் அலுவலகம் எதிரே பிச்சையெடுத்த மாணவர்!

கோவையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு வழங்குவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிச்சையெடுக்கும் போராட்டத்தில் மாணவர் ஒருவர்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிச்சை எடுத்த கல்லூரி மாணவர் அசோக்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிச்சை எடுத்த கல்லூரி மாணவர் அசோக்.
Updated on
1 min read

கோவையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு வழங்குவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிச்சையெடுக்கும் போராட்டத்தில் மாணவர் ஒருவர் வியாழக்கிழமை ஈடுபட்டார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகிலுள்ள இம்மிடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கோவை, மலுமிச்சம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் 2014-2016- ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார்.
படிப்பை முடித்த பின், மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் சான்றிதழை வழங்க மறுத்த நிர்வாகம், அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக ரூ. 70 ஆயிரம் செலுத்துமாறு நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவர் அசோக், கோவை மாவட்ட நிர்வாகத்திலும், ஆதி திராவிடர் நலத் துறையிலும் ஏற்கெனவே புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்றுச் சான்றிதழ் இல்லாததால் தொடர்ந்து படிக்கவும், வேலைக்குச் செல்லவும் முடியாமல் தவித்து வந்த அசோக், கல்லூரி நிர்வாகம் கேட்கும் கூடுதல் தொகையை, பிச்சை எடுத்து வழங்க முடிவு செய்தார்.
இதையடுத்து தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, தான் எதற்காக பிச்சை எடுக்கிறேன் என்பதை ஒரு அட்டையில் எழுதிக் கொண்டு, கையில் தட்டேந்தியபடி ஆட்சியர் அலுவலகம் வந்த அசோக், அந்த வழியாகச் சென்றவர்களிடம் பிச்சை எடுத்தார். ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார், மாணவர் அசோக்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 
இந்தச் செய்தியை அறிந்த கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவரை உடனடியாகத் தொடர்பு கொண்டு பேசியது. கட்டணம் செலுத்தாவிட்டாலும் சான்றிதழை வழங்கத் தயாராக இருப்பதாகவும், உடனடியாக வந்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும்படியும் தெரிவித்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்து சென்ற அசோக், கல்லூரி நிர்வாகத்திடமிருந்து மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com