முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவை இடம்பெறச் செய்ய வேண்டும்
என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக மருத்துவர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் சரவணன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அ. ஆறுமுகத்திடம் மனு அளித்துள்ளேன். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்புகளுக்கும், மருத்துவ அறிக்கைகளுக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளேன். சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பட்டியலிலும் பல குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக, இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட கட்சி அங்கீகாரக் கடிதத்தில் அவரது கைரேகை பெறப்பட்டபோது இருந்த மருத்துவர் பாலாஜியின் பெயர் மருத்துவர்களின் பட்டியலில் இல்லை. ஜெயலலிதா இறப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் இப்போது இடம்பெற்றிருக்கும் மருத்துவக் குழுவுக்குப் பதிலாக, வேறு மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார்.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர். இடைத் தேர்தலின்போது வேட்புமனு ஆவணத்தில் பெறப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் இருப்பதாக இவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.