மக்கள் பிரச்னையைக் கவனிக்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது: ஜி.கே.வாசன்

மக்கள் பிரச்னையை முழுமையாக கவனிக்க முடியாத சூழலில் தமிழக அரசு உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
மக்கள் பிரச்னையைக் கவனிக்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

மக்கள் பிரச்னையை முழுமையாக கவனிக்க முடியாத சூழலில் தமிழக அரசு உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு நாள்கள் பெய்த மழையால், சென்னை உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மழையால் சாக்கடை அடைப்பு, கொசு உற்பத்தி என சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அரசு சுகாதாரப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உணவு வழங்க வேண்டும்.

என்.எல்.சி. நிறுவனத்தின் நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். பங்கு விற்பனை முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கந்து வட்டியால், ஏழை - எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் உயிரையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இந்தத் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு சட்டத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளின் குழுக்களை அமைத்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

மத்திய அரசு பட்டியலில் வேளாண்மைத் துறையை இணைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 4,500-ஐ நிர்ணயம் செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு செய்த விவயாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து, புதிதாக பயிர்க் கடன் வழங்க வேண்டும். கடன் வசூலை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும்.

மக்கள் பிரச்னையில் தமிழக அரசு முழுக் கவனம் செலுத்த முடியாத சூழலில் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டெங்கு பிரச்னையில் அரசு தாமதாமான பணியை மேற்கொண்டது.

தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. எனவே, அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாள் திட்டமான இது மக்களுக்கு நன்மை பயக்கும் என மத்திய அரசு கூறுகிறது.

பல பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயங்குகிறது. தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.

பேட்டியின் போது, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஏ.நெடுஞ்செழியன், ஆர்.ஞானசந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெயசந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.ராமலிங்கம், புவனகிரி ஒன்றிய முன்னாள் தலைவர் தனலட்சுமி கலைவாணன், வடலூர் அன்பு, பண்ருட்டி நகரத் தலைவர் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com