குற்றவாளிகளைஅடையாளம் காட்டும் செயலி
குற்றவாளிகளை அடையாளம் காட்டும் செல்லிடப்பேசி செயலியை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி சோதனை முறையில் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


குற்றவாளிகளை அடையாளம் காட்டும் செல்லிடப்பேசி செயலியை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி சோதனை முறையில் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்த விவரம்: குற்றங்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளுக்கு சென்னை பெருநகர காவல்துறை முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காட்டும் வகையில் செல்லிடப்பேசி செயலியை சென்னை பெருநகர காவல்துறை வடிவமைத்துள்ளது.
இந்தச் செயலி இப்போது தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் மட்டும் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோர் மற்றும் தேடப்படும் குற்றவாளிகள் என 12,000 பேரின் தகவல்கள் புகைப்படத்துடன் இந்தச் செயலி சர்வரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
10 விநாடிகளில்: வாகன சோதனை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார் சந்தேகத்துக்குரிய நபர்களைப் பிடிக்கும்போது, அந்த நபரை செல்லிடப்பேசியில் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து, செயலியில் பதிவேற்றம் செய்தால், அந்த நபர் குற்றவாளியா அல்லது தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ளவரா என்பதை 10 விநாடிகளில் அந்த செயலி தெரிவித்துவிடும்.
பிடிபட்ட நபரின் முக அடையாளங்களை வைத்து, இந்த சர்வரில் உள்ள புகைப்படங்கள் ஒப்பீடு செய்யப்படும். அதில் ஏதாவது ஒரு குற்றவாளியின் புகைப்படத்துடன், பிடிபட்ட நபரின் புகைப்படம் ஒத்துப்போனால், அந்த நபர் குறித்த தகவல்களையும், அவர் தொடர்புடைய வழக்கு விவரங்களையும் செயலி செல்லிடப்பேசிக்கு அளிக்கும். இதன் மூலம் பிடிபட்ட நபர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம்.
சர்வரில் பிடிபட்ட நபர் குறித்து எந்தத் தகவலும் இல்லையென்றால், போலீஸாரால் சம்பந்தப்பட்ட நபர் விடுவிக்கப்படுவார். இந்த செயலி, தியாகராயநகர் மாவட்டத்தில் 500 காவலர்களின் செல்லிடப்பேசிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக காவலர்களுக்கு இந்த செயலியைச் செயல்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் இந்தச் செயலியை செயல்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலி மூலம் கடந்த 15 நாள்களில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 8 பேரை போலீஸார் அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர்.
விரைவில் 42,000 குற்றவாளிகள் குறித்த தகவல்: சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு இந்தச் செயலி, இன்னும் மேம்படுத்தப்பட்டு முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என சென்னை பெருநகர காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். அதே வேளையில் மாநிலம் முழுவதும் உள்ள 42 ஆயிரம் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் புகைப்படத்துடன் இந்த சர்வரில் பதிவேற்றும் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த செயலி மூலம் குற்றவாளிகள் எளிதாகக் கண்டறிந்து கைது செய்யப்படுவதோடு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளையும் எளிதில் பிடிக்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...