

மின்சார மீட்டர் கொள்முதல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அளவீட்டுக் கருவிகளை கொள்முதல் செய்வதில் ரூ.12.50 கோடி அளவுக்கு நடைபெறவிருந்த ஊழல் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊழல் செய்வதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 29.88 லட்சம் மின்சார அளவீட்டுக் கருவிகளை (மீட்டர்) கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. உத்தரபிரதேசத்தின் நோய்டாவைச் சேர்ந்த கேபிடல் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ரூ.453 என்ற விலையில் அளவீட்டுக் கருவிகளை வழங்க முன்வந்தது. ஆனால், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியை ஏற்காமல் ரூ.495 என்ற விலையில் அளவீட்டுக் கருவிகளை வழங்க முன்வந்திருந்த எச்.பி.எல் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை மின்சார வாரியம் ஏற்றுக்கொண்டு கொள்முதல் ஆணையை வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்து கேபிடல் பவர் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அளவீட்டுக் கருவிகளை வாங்க தடை விதித்திருக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு அளவீட்டுக் கருவிகள் கொள்முதல் சிறந்த உதாரணம் ஆகும். ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் போது குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பவருக்கு தான் ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதியாகும். அதன்படி கேபிடல் பவர் நிறுவனம் ரூ.452&க்கு அளவீட்டுக் கருவிகளை வழங்க முன்வந்த நிலையில் அதற்குத் தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 42 ரூபாய் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது என்றால், ஆட்சியாளர்களின் தூண்டுதலில், தெரிந்தே ஊழல் செய்யப்பட்டிருக்கிறது என்று தான் கருத வேண்டும்.
கேபிடல் பவர் நிறுவனத்தின் தொழில்நுட்பத் தகுதிகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லாததால் தான் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். ஏனெனில், கேபிடல் பவர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.453 என்ற விலையில் 12 லட்சம் அளவீட்டுக் கருவிகளை வழங்கியுள்ளது. அதே வரையறைகளைக் கொண்ட அளவீட்டுக் கருவிகள் தான் இப்போதும் கொள்முதல் செய்யப்படவுள்ளன. கேபிடல் பவர் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட அளவீட்டுக் கருவிகள் எந்தக் குறையும் இல்லாமல் இயங்கி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் தொழில்நுட்பத் தகுதிகள் திருப்தியளிக்கவில்லை என்று கூறுவது ஊழல் செய்வதற்கான சாக்குப்போக்காக இருக்குமே தவிர உண்மையாக இருக்காது.
தமிழக அரசில் ஊழல் மலிந்த துறைகளில் முதன்மையானது மின்துறை ஆகும். தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. தமிழகத்தில் மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவது, சூரிய ஒளி மின்சார கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்வது, பணியாளர்களை நியமிப்பது என அனைத்து நிலைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஊழலின் விளைவாக தமிழ்நாடு மின்சார வாரியம் சுமார் ரூ. 1 லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இப்போதும் கூட தமிழகத்தில் நிறைவேற்றப்படாத மின் திட்டங்களை நிறைவேற்றி மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு பதிலாக, ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே தனியாரிடமிருந்து 3500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்க நீண்டகால ஒப்பந்தத்தை ஆட்சியாளர்கள் செய்து கொண்டுள்ளனர்.
மின்சார வாரியத்தால் நடைபெறும் ஊழல்களால் ஆட்சியாளர்கள் பயனடைகிறார்கள்; மின்வாரியம் நலிவடைகிறது. இதன் பாதிப்புகளை மின்கட்டண உயர்வு என்ற பெயரில் அனுபவிப்பது பொதுமக்கள் தான். மின்வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் அரசுக்கும், மக்களுக்கும் பெரும் தீங்கை இழைத்துவிடும் என்பதால் அதை தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, மின்வாரியத்திற்கு அளவீட்டுக்கருவிகள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.