தகுதிச்சான்று இல்லாமல் தமிழகத்தில் இயங்கும் 2 லட்சம் வாகனங்கள் : மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் 11 லட்சம் வாகனங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எஃப்.சி. எனப்படும் தகுதிச் சான்று இல்லை
தகுதிச்சான்று இல்லாமல் தமிழகத்தில் இயங்கும் 2 லட்சம் வாகனங்கள் : மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் 11 லட்சம் வாகனங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எஃப்.சி. எனப்படும் தகுதிச் சான்று இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளாகும் சரக்கு வாகனங்கள், பேருந்துகள் மீதான ஆய்வை விரைவாக முடித்து, அந்த வாகனங்களை விரைந்து விடுவிக்க வேண்டும் என்று மாநில போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. 
சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமல் வாகனங்களை இயக்குவதே இவ்விபத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து எடுத்து வருகின்றன.
அதே வேளையில், விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்தல், வாகன ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
6-இல் ஒரு பங்கு வாகனங்களுக்கு தகுதிச் சான்று இல்லை: தமிழகத்தில் 6-இல் ஒரு வாகனம் தகுதிச் சான்றிதழ் இன்றி இயங்கி வருவது தற்போது தெரியவந்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 56-இன்படி வணிக ரீதியில் இயக்கப்படும் இலகு, கனரக வாகனங்களின் தகுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் ஆர்டிஓ அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை. அதாவது தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்காக இயக்கப்படும் 11 லட்சம் வாகனங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எஃப்.சி. எனப்படும் தகுதிச் சான்று இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஆய்வில் தொய்வு: இதுகுறித்து தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல் சாய் கூறியது: இந்த வாகனங்களை சோதனையிட்டு கண்டுபிடித்தால் அதிகபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. விபத்து ஏற்படும் போது தகுதிச் சான்று இல்லையென்றால்தான் வாகனத்தின் மீதே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களைச் சோதனையிட வேண்டும். ஆனால், இதை அவர்கள் முறையாக, முழுமையாக செய்வதில்லை என்றார் அவர்.
விசாரணையில் காலதாமதம்: இந்த நிலையில், விபத்துக்குள்ளாகும், அல்லது விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து, விசாரணை என்ற பெயரில் அதிக காலம் கடத்தி வருவதாகவும், குறிப்பாக ஒரு மாதம் முதல் 3 மாதத்துக்கு மேல் இந்த விசாரணைக்கு காலஅவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒருசில நேரங்களில் ஓராண்டுக்கு மேலும் காலஅவகாசம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சரக்கு வாகனங்கள், பேருந்துகள் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும், இதைக் கருத்தில் கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி வாகனங்களை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சங்கத்தின் செயலர் சி.தன்ராஜ் கூறியது: விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அதன் உரிமம் ரத்து செய்யப்படும். பின்னர் உரிய மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கோப்புகள் அனுப்பப்படும். அப்போது விசாரணை என்ற பெயரில் காலத்தை கடத்துவர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும். இதனால் விபத்துக் குறித்த விசாரணையை விரைந்து மேற்கொள்ளவும், வாகனங்கள் மீதான உரிமத்தை உடனடியாக ரத்து செய்யக் கூடாது என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்றார் அவர்.
போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை
மாநில போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த கட்டாரியா வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துக்களில் தொடர்புடைய சரக்கு வாகனங்கள் புலன் விசாரணைக்கு தாற்காலிகமாக காவல்துறையின் வசம் வைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக விபத்து ஆய்வுக்காக மோட்டார் வாகன ஆய்வாளரிடம் காண்பிக்க வேண்டும். பொதுமக்களின் அன்றாடத் தேவைக்கான பயன்பாட்டில் இச்சரக்கு வாகனங்கள் உள்ளதைக் கருத்தில் கொண்டு, ஆய்வை விரைந்து முடித்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சரக்கு வாகனங்களை உரிய ஆய்வை முடித்து விடுவிப்பதில் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் சரக்கு வாகனங்களின் ஓட்டுநரின் உரிமங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 19(1)-ன் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com