மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மருத்துவப் படிப்பைத் தொடர சேலம் வந்து சேர்ந்தார் ஹாடியா! 

'காதல் ஜிஹாத்' விவகாரத்தின் காரணமாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட இஸ்லாமிய பெண் ஹாடியா  மருத்துவப் படிப்பைத் தொடர சேலம் வந்து சேர்ந்தார் .

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:14 pm

DIN

சேலம்: 'காதல் ஜிஹாத்' விவகாரத்தின் காரணமாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட இஸ்லாமிய பெண் ஹாடியா  மருத்துவப் படிப்பைத் தொடர சேலம் வந்து சேர்ந்தார்  

கேரள மாநிலம், வைக்கம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அகிலா அசோகன். இவர் சேலத்தின் சித்தர் கோவில் பகுதியில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி இன் மெடிக்கல் சயின்ஸ் இளநிலை பட்டப்படிப்பில் நான்கரை ஆண்டுகள் தனது படிப்பை முடித்துவிட்டு கேரளா சென்றவர் இதுவரை இன்டெர்ன்ஷிப்பை முடிக்கவில்லை.

கேரளா சென்ற அவர் ஷஃபீன் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவர் தனது பெயரை ஹாடியா என்றும் மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், தனது மகளை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்தது. 

அதை எதிர்த்து, அந்தப் பெண்ணின் கணவர் ஜஹான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண்ணின் ஒப்புதலின்படியே திருமணம் நடைபெற்றுள்ளதா என்பதை அறிய, தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து என்ஐஏ விசாரணைக்கு தடை கோரி, அந்தப் பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தை விசாரித்த என்ஐஏ அமைப்பு, அந்தப் பெண்ணை, ஜஹான் மூளைச்சலவை செய்து, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே திருமணம் நடைபெற்றதா என்பதை அறிவதற்கு அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த சில வாரங்களாக தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த ஹாடியா, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த விசாரணையின்போது, அந்தப் பெண் தனது கணவருடனே செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தமிழகத்தில் கல்வியைத் தொடருமாறு நீதிபதிகள் அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்தப் பெண், தமிழ்நாட்டின் சேலம் நகருக்கு விரைவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேரள காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்தப் பெண் பயிலும் சேலம் நகரில் உள்ள அந்த தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் தலைவரை, ஹாடியாவுக்கு பாதுகாவலராக நியமித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹாடியா செவ்வாய் மாலை சேலம் வந்து சேர்ந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவருக்கு அங்கே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வழக்கின் அடுத்த விசாரணை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.