டெங்கு ஒழிப்புப் பணிகளைக் கண்காணிக்க மாவட்டக் குழு: முதல்வர் உத்தரவு

மாவட்ட அளவில் டெங்கு ஒழிப்புப் பணிகளைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட அளவில் டெங்கு ஒழிப்புப் பணிகளைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னையில் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அடுத்த 15 நாள்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிய வேண்டும்.
குப்பைக்கூளங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை வட்டம், வட்டார அளவில் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழு உறுப்பினர்கள் தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் நடைபெறுவதைக் கண்காணித்து உறுதி செய்து தினசரி அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும்.
இந்தப் பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், குடிசைப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
சுத்தம் செய்யப்படாத இடங்கள், டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்கள் அல்லது புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டத்தின் கீழ், அந்த இடத்தில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் அமர்த்தப்படுவர். சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து தேவைகளை நிறைவேற்றவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐ.ஏ.எஸ்., நிலையிலுள்ள உயர் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com