பருவமழை காலங்களில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் பாழடைந்த கட்டடங்கள்

பருவமழை பெய்து வரும் நிலையில் சென்னை மாநகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இடியும் நிலையிலுள்ள பாழடைந்த கட்டடங்களால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.
பருவமழை காலங்களில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் பாழடைந்த கட்டடங்கள்

பருவமழை பெய்து வரும் நிலையில் சென்னை மாநகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இடியும் நிலையிலுள்ள பாழடைந்த கட்டடங்களால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங்கள் மெத்தனத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முதன்மை பகுதியான ஜார்ஜ் டவுன் பகுதியில் ஏராளமான பழைய கட்டடங்கள் இடியும் நிலையில் உள்ளன. அன்றைய சென்னை நகரம் இப்பகுதியில் தான் உருவாகி வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் மட்டும் நூறு ஆண்டுகளைக் கடந்த நூற்றுக்கணக்கான கட்டடங்கள் உள்ளன. 
இவற்றில் பல ஆங்கிலேயர் கால கட்டடக் கலையை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாரீஸ் கார்னர் என அழைக்கப்படும் முருகப்பா குழு அலுவலக கட்டடம், பாரத ஸ்டேட் வங்கி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், எச்.எஸ்.பி.சி வங்கி அலுவலகம் உள்ளிட்டவை அடங்கும். இது தவிர ஏராளமான கட்டடங்கள் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகின்றன. இவ்வகை கட்டடங்கள் சீரமைக்கப்படாததால் ஆண்டுக்கு ஆண்டு பலமிழந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இதுபோன்ற பாழடைந்த கட்டடங்கள் ஏராளமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இருவர் இறந்து மூன்று ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை
சென்னையில் ராஜாஜி சாலை என்பது மிக முக்கியப் பகுதி ஆகும். துறைமுக பிரதான நுழைவு வாயிலின் அருகே பழமையான கட்டடம் ஒன்று உள்ளது. இதில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. இக்கட்டடத்தின் முன்பகுதி கடந்த 2014, நவம்பரில் பெய்த பருவ மழையின்போது திடீரென இடிந்து விழுந்தது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த இருவர் உடல் நசுங்கி இறந்து போயினர். இதனையடுத்து உடனடியாக இக்கட்டடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பி இருந்தனர். இதனையடுத்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இடியும் நிலையில் இதுபோன்ற கட்டடங்கள் சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் சுமார் 132 கட்டடங்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இக்கோரச் சம்பவம் நடந்து மூன்றாண்டுகளை எட்ட உள்ள நிலையில் அன்றைய நிலையிலேயே காணப்படுகிறது. விபத்துக்குப் பிறகு இக்கட்டடத்தை இடிக்கவோ அல்லது சீரமைக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.
மாடியில் வளரும் மரங்கள்: 
பொதுவாக பழைய கட்டடங்கள் பாழடைந்த நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் பராமரிப்பின்மையால் மரங்கள் முளைத்து வளர்வதே ஆகும். மேற்குறிப்பிட்ட கட்டடத்தில் தற்போது ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றின் வேர்கள் கட்டடத்தின் சுவர்களில் வேரூன்றியுள்ளன. மேலும் மேற்கூரையில் மழை பெய்யும்போதெல்லாம் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது. தனியாருக்குச் சொந்தமான இக்கட்டடத்தின் எதிரே அரசுக்குச் சொந்தமான ஆங்கிலேயர் காலத்துக் கட்டடம் ஒன்று உள்ளது. இதில் வெட்டக்கூடிய அளவிற்கு மரங்கள் வளர்ந்துள்ளன. கட்டடக் கலை நிரம்பி வழியும் இக்கட்டடத்தை பராமரிக்கவோ அல்லது கண்டுகொள்ளவோ அதிகாரிகள் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் சொல்வது என்ன? 
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.பி.விவேகானந்தன் கூறியது: 
ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகரமான கட்டடங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919 -ன் பிரிவு 258 (1), (2), (3) ஆகிய உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கட்டடம் அபாயகரமானதாக உள்ளது என்பது ஆணையருக்குத் தெரியவந்தால் அக்கட்டடத்தின் உரிமையாளரை அழைத்து உடனடியாகச் சீரமைக்கும்படியோ அல்லது இடித்துவிடும்படியோ நோட்டீசு கொடுக்கலாம். இதனை கட்டட உரிமையாளர் அலட்சியம் செய்தாலோ அல்லது ஆணையரின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்தாலோ பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகமே கட்டடத்தை இடிக்கும் பணியை மேற்கொள்ளலாம். மேலும் இதற்கான செலவினங்களை கட்டட உரிமையாளரிடமிருந்து வசூல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதே உண்மை என்றார் விவேகானந்தன்.
துரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை: 
இது குறித்து திருவொற்றியூர் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி கூறியது: பருவமழை காலங்களில் மேற்கூரைகளில் நீர் தேங்கி பழமையான கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்கின்றன. ராஜாஜி சாலையில் விபத்து நடைபெற்று மூன்று ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை மாநகராட்சி ஆணையர் எவ்விதம் சாக்குப் போக்குக் கூறப்போகிறார் என்பது தெரியவில்லை. மேலும் அந்தக் கட்டடத்தைப் பார்த்தாலே பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு பயமூட்டும் நிலையில்தான் உள்ளது. இந்தக் கட்டடம் அல்ல, சென்னை மாநகரத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இது போன்ற கட்டடங்களை கண்டறிந்து கணக்கிட வேண்டும். அரசுக் கட்டடங்களானாலும், தனியார், தனிநபருக்குச் சொந்தமான கட்டடங்கள் இருந்தாலும் உடனடியாகச் சீரமைக்கவோ, அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை உள்ளாட்சித் துறை செயல்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.
பருவமழை பெய்வது மக்களின் நலனை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதே நேரம் அது விளைவிக்கும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும் அரசாங்கமும், பொதுமக்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே யதார்த்தமானது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com