நடிகர்கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்கிறார்கள்: தமிழிசை சௌந்தரராஜன்

நடிகர்கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
கடலூரில் உயிரிழந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கிருபாநிதி உடலுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்திய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன்.
கடலூரில் உயிரிழந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கிருபாநிதி உடலுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்திய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன்.
Updated on
1 min read

நடிகர்கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி கடலூரில் வியாழக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு தமிழிசை செüந்தரராஜன் வெள்ளிக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர்கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்கிறார்கள். நாங்களோ ஊழலுக்கு எதிராகச் செயல்படுகிறோம். ஊழல் செய்துவந்த கட்சியை அப்புறப்படுத்திவிட்டு ஊழலே இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறோம். பிரபலங்கள் பேசும் கருத்துகள் பிரபலமாகிவிடுகின்றன. இதனால், அவர்கள் கவனத்துடன் பேச வேண்டும். அரசின் நல்ல திட்டங்களை கொச்சைப்படுத்தக் கூடாது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும்.
நடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில், திரைப்படங்களில் நடிப்பாரா? முறைகேடுகளின்றி முதல் நாளே ரூ. 33 கோடிக்கு திரைப்பட வசூல் நடந்ததா? மக்கள் கை தட்டுவதால் அந்தக் கருத்து அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று அர்த்தமல்ல. பிடிக்காவிட்டாலும் கை தட்டுவார்கள். மெர்சல் திரைப்படத்தில் மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக பேசாத கமல்ஹாசன் தற்போது விளம்பரத்துக்காகப் பேசுகிறார். திரைப்பட வாய்ப்புகள் இருந்த நிலையில் அவர் நாட்டைப் பற்றி கவலைப்பட்டதில்லை. சுட்டுரை, முகநூலில் அரசியல் நடத்திவிட முடியாது. நிலவேம்பு பற்றி கருத்து தெரிவித்த கமல், தற்போது மாற்றுக் கருத்தை தெரிவிக்கிறார். நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவது திரைப்படங்கள் அல்ல. நடிகர்கள் உள்நோக்கத்தோடு விமர்சிக்கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கூட்டப்பட்டு, வரி விதிப்பில் குறைபாடுகள் இருப்பின் அவை களையப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி மூலம் நல்ல பொருள்களை வாங்க முடிகிறது. மருத்துவம், கல்வி ஆகியவை வியாபாரமாக்கப்படுவது தடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது. 25 சதவீதம் குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இதேபோல, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த பிரபல நிறுவனங்கள் அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டில் மது அருந்துவது, திருடுவது குறைந்துள்ளது. சேமிப்பு அதிகரித்துள்ளது.
ஒரு திரைப்படத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்தியதாகக் கூறி அந்தக் காட்சியை நீக்க வலியுறுத்தி அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் போராட்டம் நடத்தினார். அவர்கள் கூறினால் கருத்து சுதந்திரம். அதுவே நாங்கள் கூறினால் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறுகிறார்கள் என்றார் தமிழிசை சௌந்தரராஜன். பேட்டியின் போது, கட்சியின் மாநில நிர்வாகி ராஜரத்தினம் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com