பாரத மாதாவுக்கு கோயில்: பாப்பாரப்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது

பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கைது செய்யப்பட்டார்.
பாரத மாதாவுக்கு கோயில்: பாப்பாரப்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது
Updated on
2 min read


பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கைது செய்யப்பட்டார்.

தியாகி சுப்ரமணிய சிவாவின் கனவுப்படி பாரத மாதா சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி அனந்தன் அக்டோபர் 2ம் தேதி சென்னையில் இருந்து நடை பயணம் தொடங்கினார்.

நடைப்பயணம் நேற்று மாலை தருமபுரி மாவட்டம்  பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் நேற்று நிறைவு பெற்றது. இன்று காலை மணிமண்டபத்தில் உள்ள நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய குமரி அனந்தன், பாரத மாதாவுக்கு கோயில் கட்டுவது தொடர்பகா அரசு ஆணை வெளிவரும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து அந்த வளாகத்தில் அமர்ந்துவிட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஷங்கர் மற்றும் காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு சார்பில் பாரத மாதா கோயில் அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கி விட்டன என்று கூறி, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

ஆனாலும், அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்வதில் இருந்து பின்வாங்காததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குமரி அனந்தனை 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, தன்னை எங்கு அழைத்துச் சென்றாலும் நான் உண்ணாவிரதம் இருப்பேன் என்று குமரி அனந்தன் கூறினார். 

பாரத மாதாவுக்கு சமத்துவ கோயில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி, சென்னையிலிருந்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வரை நடைப்பயணம் மேற்கொண்டிருந்த குமரி அனந்தன் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா பாரத மாதாவுக்கு சமத்துவ கோயில் கட்ட வேண்டுமென 6 ஏக்கர் நிலம் வாங்கி கட்டப்படாமல் இறந்து போனார்.

சுதந்திரப் போராட்ட தியாகியான அவரது வாழ்நாள் ஆசையான சமத்துவக் கோயிலைக் கட்ட வேண்டுமென மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 2012-ஆம் ஆண்டு மனு அளித்தேன். மனுவைப் பெற்ற அவர், அப்போதைய தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லிக்கு ஆணையிட்டார். அதனை அதிகாரிகள் செயல்படுத்தாததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 19.06.2015-இல் தமிழக அரசு மூன்று மாத காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. ஆனால், 24 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடமும் மனு அளித்தேன். மேலும், உயர் நீதிமன்றம் வரை சென்று ஆணை பெற்று வந்தோம்.

ஆனால், சமத்துவக் கோயிலைக் கட்ட அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால், அதனை வலியுறுத்தி சென்னை கடற்கரையிலிருந்து பாப்பாரப்பட்டி வரை நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.

மதுவை மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கி மத்திய பட்டியலுக்கு கொண்டு வந்து நாடு முழுவதும் மதுவை ஒழிக்க நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி அனந்தன் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com