புயல் பாதுகாப்பு மையங்களில் அம்மா உணவகம் - தீயணைப்பு நிலையம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் சென்னை திருவொற்றியூர், கத்திவாக்கம் ஆகிய இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள புயல்
புயல் பாதுகாப்பு மையங்களில் அம்மா உணவகம் - தீயணைப்பு நிலையம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் சென்னை திருவொற்றியூர், கத்திவாக்கம் ஆகிய இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் இரண்டும் வேறு பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேரிடர் காலங்களில் பொதுமக்களை எங்கு தங்க வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

புயல், பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க அரசுப் பள்ளிகளைத் தான் நம்ப வேண்டியுள்ளது. இப்பள்ளிகளில் போதிய கழிப்பிடங்களோ அல்லது தங்குவதற்கான வசதிகளோ இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு நிரந்தரமாக பாதுகாப்பு மையங்களை அமைக்க முடிவு செய்த தமிழக அரசு, உலக வங்கி அளித்த ரூ. 345 கோடி நிதியுதவியுடன் கடலோர மாவட்டங்களில் சுமார் 121 இடங்களில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. பொதுப்பணித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட 39 பாதுகாப்பு மையங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த புதன்கிழமை திறந்து வைத்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே கட்டப்பட்ட பாதுகாப்பு மையங்கள் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

திருவொற்றியூர் மையத்தில் தீயணைப்பு நிலையம்:

வங்கக் கடலில் ஏற்படும் புயல்கள் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் நிலை ஏற்படும்போது வடசென்னையின் காசிமேடு, திருவொற்றியூர், கத்திவாக்கம் ஆகிய பகுதிகள் பெரும்பாலும் கடும் பாதிப்புக்குள்ளாகும். காசிமேடு முதல் எண்ணூர் வரை சுமார் 10 கி.மீ தூரத்திற்கு கடலோரம் முழுவதும் குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தொடரும் கடலரிப்புப் பிரச்னை காரணமாக தென் சென்னையைப் போல் குடிசை பகுதிகளுக்கும், கடலுக்கும் இடையே மணல் பரப்பும் இல்லை.
இதனால் புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. சுனாமி தாக்கிய போதும், புயல், மழைக் காலங்களிலும் இம்மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டு திருவொற்றியூரில் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. நிரந்தரக் கட்டடம் அமைக்கும் வரை குறுகிய காலத்திற்கு புயல் பாதுகாப்பு மையத்தில் அலுவலகம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 8 ஆண்டுகளைக் கடந்தும் தீயணைப்பு நிலையம் கட்டப்போகும் இடத்தைக் கூட தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கத்திவாக்கம் மையத்தில் அம்மா உணவகம்:

இதனிடையே, திருவொற்றியூரை ஒட்டிய பகுதியான கத்திவாக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு புயல் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டது. முற்றிலும் குடிசைப் பகுதிகள் அமைந்த கடலோரப் பகுதியான இங்கு மீனவர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனவே பேரிடர் காலங்களில் இம்மையம் இப்பகுதி மக்களுக்குப் பேருதவியாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி திறந்தது. புதிய கட்டடம் அமைக்கப்படும் வரை தாற்காலிகமாக அம்மா உணவகம் செயல்படும் என அறிவித்தது. ஆனால் இரண்டாண்டுகள் உருண்டோடியும் அம்மா உணவகத்திற்கு கட்டடம் கட்டப்படவில்லை. புயல் பாதுகாப்பு மையத்திலேயே அம்மா உணவகம் இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருகிறது. மேலும், அரசுத் துறைகளின் இலவச பொருள்களை வைக்கும் இடமாகவும் சில நேரங்களில் செயல்பட்டு வருகிறது.
தீ விபத்து எப்போதாவதுதான் ஏற்படும் என்றாலும் தீ விபத்தை உடனடியாகச் சமாளிக்கும் வகையில்தான் 24 மணி நேரமும் விழிப்புடன் தீயணைப்புப் படையினர் செயலாற்றுகின்றனர். இதேபோல் புயல், பெருமழை போன்ற பேரிடர்கள் எப்போதாவதுதான் ஏற்படும் என்றாலும் கூட பேரிடர்களில் சிக்கித் தவிக்கும் மக்களை காக்கும் விதமாக புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த 2 மையங்களும் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. எந்த திசையிலிருந்து பலத்த காற்று வீசினாலும் தாங்கும் திறன் அடிப்படைதான் இதற்குக் காரணம். இதுபோல உள்புறமாக மேலே செல்லும் வகையில் மூன்று அடுக்கு தளங்கள், காற்றாட்டத்திற்கு ஜன்னல்கள், மின் விளக்குகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த நோக்கங்கள் சிதையாமல் இருக்க வேண்டுமெனில் இக்கட்டடங்கள் இரண்டும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களுக்கு முன்பு சீர் செய்யப்பட்டால் ஆபத்து ஏற்படும்போது பள்ளிக் கட்டடங்களைத் தேடி அலைய வேண்டியது இல்லை.
எனவே இந்த இரண்டு கட்டடங்களும் காலி செய்யப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு மையமாக போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்பட வேண்டும். அதே போல் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கும் பணியையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். முதல்வரால் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களும் திருவொற்றியூர், கத்திவாக்கம் மையங்களைப்போல் மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com