
சென்னை: நீட் தேர்வு குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் மக்களை நம்பவைத்து ஏமாற்றினீர்கள், மாணவர்களை நம்பவைத்து ஏமாற்றாதீர்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியதாவது:
ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவு தந்த அரசியல் கட்சிகள், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து குரல் கொடுக்காதது ஏன்?
கன்னியாகுமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது நீதித்துறைக்கு தாமதம் ஏன்?
மக்களை நம்ப வைத்து அரசு ஏமாற்றி விட்டதாக தெரிவித்த நீதிபதி நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும் நம்ப வைத்து ஏமாற்ற கூடாது என்று அரசுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், நீட் தேர்வு குறித்து ஊடகங்களிடம் அமைச்சர்கள் குறித்து தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு அறிவுரை தெரிவித்துடன் ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும் குழு அமைப்பதில் தாமதம் ஏன் என்று அரசுக்கு அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பிய நீதிபதி, வல்லுநர்களை கண்டறிந்து குழு அமைக்க ஒரு மணி நேரம் போதாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
அரசு இதுபோன்று காலம் தாழ்த்தியதால்தான் ஒரு மாணவியின் உயிரை இழந்துள்ளோம் என்று நீதிபதி தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் குறித்து கேள்வி எழுப்புவதால், நீதித்துறை மீதான விமர்சனங்களை ரசிக்கிறார்களா?
இணையதளத்தில் விமர்சித்தவர்கள் யார் என கண்டறிய வேண்டும். தலைகவசம், டாஸ்மாக் குறித்த உத்தரவுகள் தொடர்பான என் மீது அதிகமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
விமர்சனங்கள் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி என். கிருபாகரன் தெரிவித்தார்.
அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.