காட்சிப் பொருளாக தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்

விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தை பராமரிப்பு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் கல்லூரி சாலையில் பராமரிப்பின்றி காணப்படும் தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்.
விருதுநகர் கல்லூரி சாலையில் பராமரிப்பின்றி காணப்படும் தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்.

விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தை பராமரிப்பு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி- வள்ளியம்மை தம்பதியரின் மகனாக 1895 இல் பிறந்தவர் சங்கர லிங்கனார். இவர், 1908-இல் ஞானதிநாத நாயனார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்த போது, அதே பள்ளியில் காமராஜர் முதல் வகுப்பு படித்துள்ளார்.
தனது இளம்வயதில் 1917இல் காங்கிரஸில் இணைந்தார். அப்போது, விருதுநகர் கதர் வஸ்திராலயம் என்ற பெயரில் கடையைத் திறந்து கதர் விற்பனையை அதிகரித்தார். இவரைப் பாராட்டி 1926 இல் சுதேசமித்திரன் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. 1930-இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரக பேராட்டத்திற்காக தண்டி சென்ற போது, சங்கரலிங்கனார் மூன்று நாள்கள் காந்தியுடன் பயணம் மேற்கொண்டார். காந்தி தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்ட காலங்களில் இவர் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி முதலான நகரங்களுக்கு சென்று ஆதரவு திரட்டினார். இதற்காக தலா 6 மாதம் சிறை தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
1952இல் அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள் மற்றும் நான்காயிரம் ரொக்க பணத்தை விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். இதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையை கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாத கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார். பெருந்தலைவர் காமராஜர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்துக்கு இது முன்னோடியாகும்.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி விருதுநகர் அருகே சூலக்கரையில் 27.07.1956 இல் உண்ணாவிரதம் தொடங்கினார். அண்ணா, மா.பொ. சிவஞானம், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் வலியுறுத்தியும் உண்ணாநோன்பை கைவிட மறுத்தார்.
10.10.1956 அன்று மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு காவல் துறையினர் அவரைக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பெற உடன்பட வில்லையாம். இறுதியில், 76 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், அண்ணா தமிழக முதல்வராக 14.4.1967 இல் பொறுப்பேற்றதும், சென்னை கோட்டை முகப்பில் தமிழக அரசு தலைமைச் செயலகம் என்ற பெயர் பலகையைத் திறந்து வைத்தார். சட்டமன்றத்தில் சென்னை மாநிலம் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான அரசியல் தீர்மானத்தை 18.07.1968இல் அண்ணா முன் மொழிந்தார். நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றுவதற்கான மசோதா 23.11.1968இல் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் அண்ணா, தமிழ்நாடு என பெயர் மாற்றி தியாகி சங்கரலிங்கனாரின் கனவை நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தார். இந்நிலையில், விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, விருதுநகரில் சங்கரலிங்கனார் மணிமண்டபம் ரூ.77 லட்சம் செலவில் கட்டப்பட்டு 25.4.2013-இல் திறக்கப்பட்டது. இதில், ஒரு காப்பாளர், ஒரு காவலர், ஒரு துப்புரவுப் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தினமும் மணிமண்டபத்தைத் திறந்து வைப்பதுடன் சரி. அங்கு சுத்தம் செய்வதோ, பாதுகாப்புப் பணியிலோ யாரும் இருப்பதில்லை.
இதன் காரணமாக அங்கு சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில் அவரது மார்பளவு சிலை மட்டுமே உள்ளது. அவரை பற்றிய அரிய புகைப்படங்கள், குறிப்புகள், நூலகம் ஏதும் இல்லாததால் பார்வையாளர் வருகையும் கேள்விக்குறியாக உள்ளது.
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாரின் மணி மண்டபத்தை முறையாக பராமரித்து அவருக்கு மரியாதை செலுத்த சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com