
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வலியுறுத்தி, திமுக சார்பில் சென்னையில் சனிக்கிழமை (ஜன.21) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று முதல்வர் கூறியிருப்பது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
அவசரச் சட்டத்தை முன்கூட்டியே மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கொண்டு வந்திருந்தால் பொங்கல் அன்றே ஐல்லிக்கட்டு நடைபெற்றிருக்கும். எனினும், இனியும் காலதாமதமின்றி உடனே ஜல்லிக்கட்டு நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும். மேலும், இனி எந்த வகையிலும் ஜல்லிக்கட்டு தடைபடாத வகையில், காளைகளை மத்திய அரசும் அதன் அறிவிக்கையில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
என் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர். வாடிவாசலில் காளை மாடுகள் அவிழ்த்து விடப்படும் வரை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.