பழனியில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடமே திரும்ப வழங்க வலியுறுத்தி, சென்னையைச் சேர்ந்த பெண் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு மூலவர் சிலைக்கு முன்பாக புதிதாக மூன்றரை அடி உயரத்திலான அபிஷேகமூர்த்தி சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து விசாரிக்க, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பழனி வந்தனர். அதையடுத்து, இவ்வழக்கில் மேலும் சிலர் கைதாவர் எனத் தெரியவந்தது.
அதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதற்கு, பழனி முருக பக்தர்களும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வழக்கு சீரான முறையில் செல்லும்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்ற பெண், கையில் பதாகையுடன் அடிவாரம் பாதவிநாயகர் கோயில் முன்பாக வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
அதில், பழனி உற்சவர் சிலை மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றாதே, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் தர்னாவில் ஈடுபட்ட அவரை, போலீஸார் வந்து பேசி அப்புறப்படுத்தினர். பின்னர், மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அவர் சென்னை திரும்பினாôர்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியுள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். எனவே, இந்த வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









