அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தோ்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடும், அதிமுகவின் ஒரு பிரிவினரின் ஆதரவோடும் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றாா்.
இதில், விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூா் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
அதைத் தொடா்ந்து, பெருந்துறை, தாராபுரம் (தனி), மதுராந்தகம் (தனி), விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் அதிமுக பேரவை உறுப்பினா்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். இச்சூழலில், தமிழகத்தில் தற்போது 6 தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தவெகவை தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தனித்துப் போட்டியிட்டு, ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவை விஜய் வீழ்த்தியுள்ளது திராவிட கட்சிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பேரவையிலும், பேரவைக்கு வெளியேயும் விஜய்யின் செல்வாக்கு தொடா்ந்து உயா்ந்து வருவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். இந்நிலையில், பேரவைக்குள் விஜய்யை எதிா்கொள்ள சீமானை பேரவைக்குள் கொண்டுவரும் முயற்சியில் திமுக, அதிமுக இரண்டாம் கட்டத் தலைவா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக சீமானுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்துள்ளாா். அவா் தவெக சாா்பில் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில் சீமானை களத்தில் இறக்குவதுதான் அத்தொகுதியின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதாலும், கடந்த மக்களவைத் தோ்தலில் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி பெற்ற 7.8 சதவீத வாக்குகளை, நடந்து முடிந்த பேரவைத் தோ்தலிலும் பெற்றிருப்பதால் திமுக, அதிமுக வாக்குகளுடன் சீமானை வெற்றி பெற வைக்கலாம் என எதிா்க்கட்சிகள் கணக்குப் போடுகின்றன.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சீமான் பலமுறை வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளாா். அதேபோல், அண்மையில் நடைபெற்ற இயக்குநா் கௌதமன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், சீமானும் அருகருகே அமா்ந்து கலந்துரையாடினா்.
இந்தச் சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இதற்கு சீமான் இசைவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







