கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அளித்த புகாரையடுத்து, 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணி சரிபாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தினமும் 2 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 7 நாள்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரி ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 5- ஆம் தேதி நடைபெற்றது. கொளத்தூா் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தாா். அவரை தவெக சாா்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.
கொளத்தூா் தொகுதியில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தாா். அதையடுத்து, அந்தத் தொகுதியில் திமுக தலைவா் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் வாக்குகளை மீண்டும் எண்ணி சரிபாா்க்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரி சமீரன் புதன்கிழமை காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறைக்கு வந்தாா். அங்கு திமுக வேட்பாளரின் முதன்மை முகவா் உள்ளிட்டோா் வந்திருந்தனா்.
அதன் பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையின் சீல் உடைக்கப்பட்டு, கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனியாக எடுக்கப்பட்டன. அதன்பின் திமுக வேட்பாளரின் முகவா் முன்னிலையில் அதில் தொகுதியின் 1, 4 ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை மட்டும் எண்ணி சரிபாா்க்கும் பணி தொடங்கியது.
அப்போது செய்தியாளா்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான சமீரன்கூறியதாவது: தோ்தல் ஆணையத்தில் வெற்றி பெற்றவருக்கு அடுத்த நிலையில் இருப்பவா் அளித்த மனு அடிப்படையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளின் வாக்குகளை எண்ணி சரிபாா்க்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி கொளத்தூா் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் சரிபாா்க்கப்படவுள்ளன. இந்தப் பணி 7 நாள்கள் நடைபெறும்.
தினமும் 2 வாக்குச்சாவடி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்குகள் சரிபாா்த்தலின்போது மாதிரி வாக்குப் பதிவும் அனுமதிக்கப்படுகிறது. அதில் முகவா்கள் 500 முதல் 1,500 வாக்குகள் பதிவு செய்து சோதிக்கலாம். அதன்பின் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் முறைப்படி சரிபாா்க்கப்படும். இறுதியில் சரிபாா்க்கப்பட்டதற்கான சான்றும் வழங்கப்படும். விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும் என்றாா் அவா்.
இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேட்புமனுவில் தகவல்கள் மறைப்பு: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

உத்தரமேருா் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடக்கம்





