முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராவுக்கு அடுத்தபடியாக தற்போது பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள ராணுவ கண்காட்சியில் கலந்து கொள்ள சென்னை வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தயாராக உள்ளன.
முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராவுக்கு அடுத்தபடியாக தற்போது பிரதமர் நரேந்திர மோடி
Updated on
2 min read


சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள ராணுவ கண்காட்சியில் கலந்து கொள்ள சென்னை வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தயாராக உள்ளன.

தமிழகத்துக்கு வரும் இந்தியாவின் முக்கிய தலைவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற விருப்பது இது 3வது முறையாகும்.

ஏற்கனவே, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழகம் வந்த ஜவகர்லால் நேருவுக்கும், ராணுவ ஆட்சியின் போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தேசிய ஊடகங்கள் அனைத்தின் பார்வையும் தமிழகத்தின் பக்கம் திருப்பும் வகையிலும் திமுக சார்பில் இந்த கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படுகிறது.

முதல் முறையாக 1953ம் ஆண்டு இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டி திமுகவினர் வரவேற்றனர். இந்த போராட்டத்திற்கு திராவிடக் கட்சிகள் பொறுப்பேற்றன. 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஹிந்தி திணிப்புக்கு எதிராக, இளம் காளையாக இருந்த திமுக கடுமையான போராட்டத்தில் இறங்கியது. 

1953ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி கூடிய திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில், நேரு கொண்டு வந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக ரயில் மறியல் மற்றும் கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்தது.

அதன்படி, ஜூலை 15ம் தேதி திமுக தலைவர்கள் பலரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியும், திருச்சியில் டால்மியாபுரம் பகுதியில் ரயில் மறியலில் ஈடுபட்டு கைதானார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தமிழகம் வந்தார் அப்போதைய பிரதமர் நேரு. ஆனால், அந்த சமயத்தில் சிறைக்கு வெளியே ஒரு சில திமுகவினர் மட்டுமே இருந்த போதும், அவர்கள் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டி கைதாகி சிறைக்குச் சென்றனர்.

அடுத்த கருப்புக் கொடி போராட்டம் 1977ம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக நடத்தப்பட்டது. அவர் பிரதமராக இருந்த போது இந்தியாவில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்து, பொதுமக்களுக்கு எதிராக மிக மோசமான அடக்கு முறையைக் கையாண்டதைக் கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பழ. நெடுமாறன் பதவி வகித்தார். அந்த போராட்டம் மிக மோசமான நிகழ்வாக மாறியது. மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திரா காந்தியை திமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு கருப்புக் கொடி போராட்டம் நடத்திய போது, அவரை சிலர் தாக்கவும் முற்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பழ நெடுமாறன் கூறியிருந்தது, "மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திரா காந்தி வந்திருந்தார். நான் உட்பட சில கட்சித் தலைவர்களுடன் இந்திரா காந்தி திறந்த காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஏராளமான திமுகவினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர். அங்கிருந்த வரவேற்பு பதாகைகளை கீழே தள்ளினர். நாங்கள் தெற்கு முக்கிய சாலையை அடைந்த போது, திமுக தொண்டர் ஒருவர் இந்திராவை தாக்கினார். இந்திராவை காப்பாற்ற நாங்கள் எவ்வளவோ முயன்றும், போராட்டக்காரர்கள் தாக்கியதில் இந்திரா காந்திக்கு காயம் ஏற்பட்டது" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் இன்று தொடங்கிய ராணுவக் கண்காட்சிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவது என்று திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியப் பிரதமருக்கு திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்த கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com