வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ள புகாரில் வழக்குப் பதிவு செய்யாத விவகாரம் தொடர்பாக, சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குருபிரசாத் என்பவரின் தந்தை ஜி.நடராஜன் தாக்கல் செய்த மனுவில், எங்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஜி.ராஜேந்திரன் என்பவர் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டடம் கட்டி வருகிறார். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 2017 -ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் சிலருடன் எங்கள் வீட்டுக்குள் புகுந்த ராஜேந்திரனின் மனைவி எங்கள் வீட்டுப் பெண்களைத் தாக்கினார்.
இதுதொடர்பாக விடியோ ஆதாரங்கள் மற்றும் அவர்கள் வந்த காரின் பதிவு எண்ணுடன் பள்ளிக்கரணை போலீஸில் புகார் அளித்தேன். ஆனால், அந்தப் புகாரின் பேரில் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இதுதொடர்பாக விசாரணை நடத்த பரங்கிமலை துணை ஆணையரான எம்.எஸ்.முத்துசாமியை நியமித்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட துணை ஆணையர் இது சிவில் பிரச்னை என அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் மாநகர காவல் ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
இதையடுத்து ஆஜரான பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் சிவக்குமார் வியாழக்கிழமை பிற்பகல் 1.45- மணிக்கு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ள புகார் மீது நீதிமன்றம் எச்சரித்த பிறகு இப்போதுதான் வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். போலீஸ் அதிகாரிகளே வழக்குரைஞர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தச் சம்பவம் சிவில் பிரச்னை தொடர்புடையது என அறிக்கை தாக்கல் செய்த பரங்கிமலை காவல் துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி வரும் ஆகஸ்ட் 6 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









