
குமாரபாளைம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில், பாதிரியார் மனைவி, மகன் உள்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து கேரள மாநிலம், அடூருக்கு சொகுசுப் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதன்கிழமை இரவு புறப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரவிச்சந்திரன் (54) பேருந்தை ஓட்டிச் சென்றார். கடலூர் மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலிருந்து சவுக்குக் கட்டைகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராமல் லாரியின் பின்பகுதியில் மோதியது.
இதில், லாரி சாலையோரத்தில் கவிழ்ந்ததோடு, சவுக்குக் கட்டைகளின் துண்டுகள் பேருந்துக்குள் புகுந்தன. மேலும், சவுக்குக் கட்டைகள் சாலையில் விழுந்ததால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில், பேருந்தின் இடதுபுறம் அமர்ந்து பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இதில், கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், மங்கரத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ள மாத்யுவின் மனைவி மினி வர்கீஸ் (37), மகன் ஆசல் லிஜோ (10), பேருந்தின் உதவியாளர் சித்தார்த் (32) ஆகியோர் உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் மாத்யூ (43), அருண் (29), கேசியல் (26), சானூ (38), லிஜோ (25), ஷ்யாம் (30), பிளோமினா (54), ஜார்ஜ் (54), சோபல் (38) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜார்ஜ் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த குமாரபாளையம் தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





