சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தலைத் தடுக்கக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, காவல்துறை டி.ஜி.பி மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
உள்நோக்கம் இல்லை: இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த்பாண்டியன் ஆஜரானார். அப்போது, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் சார்பில் இணைச் செயலாளர் எம்.முருகன் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிலை கடத்தல் தொடர்பான புலன் விசாரணையை நீர்த்துப் போகச் செய்யும் எண்ணத்திலோ, திசை திருப்ப நினைத்தோ இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. மேலும், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவேதான் இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓராண்டாக: சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், கடந்த ஓராண்டாக அரசுக்கு எந்தவொரு அறிக்கையும் அளிக்கவில்லை. மேலும் காவல் துறை டி.ஜி.பி நடத்தும் ஆய்வு கூட்டங்களிலும் அவர் பங்கேற்பதில்லை. பலமுறை அரசு கேட்டும்கூட அவர் தான் மேற்கொண்ட விசாரணைகள் குறித்த விவரங்களை இதுவரை அளிக்கவில்லை. இதுவரை நடத்தப்பட்டுள்ள புலன்விசாரணையில் 113 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
கொள்கை முடிவில்: எனவே, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவை கலைக்கும் எண்ணம் அரசுக்குக் கிடையாது என அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






