பொதுப் பணித் துறையின் புதிய கட்டடங்கள், ஊரக வளர்ச்சித் துறை சார்பிலான உயர்நிலை பாலங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
காவிரி டெல்டாவில் தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப ஆறுகள், வாய்க்கால்களை மேம்படுத்தும் வகையில் திருவாரூர், நாகப்பட்டினத்தில் திட்ட செயலாக்க அலுவலகக் கட்டடம் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கீழ்வெண்ணாறு அமைப்பிலுள்ள பாசன கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மீளகட்டுதல், புனரமைத்தல் ஆகிய பணிகளை மேற்பார்வையிட 16 ஜீப்புகள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 ஓட்டுநர்களுக்கு வாகனங்களின் சாவிகளை வழங்கினார். இதேபோன்று, பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனங்களையும் அவர் அளித்தார்.
ஊராட்சித் துறை: தருமபுரி மாவட்டம், நடேசன்கொட்டாய் - சவுளுக்கொட்டாய் சாலையில் உயர்நிலை பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் -நூக்கம்பாளையம் சாலையில் உயர்நிலை பாலம், படப்பை -நீலமங்கலம் சாலையில் கட்டப்பட்ட பாலம், கிருஷ்ணகிரி சூளகிரியில் போடூர் -ஆழியாளம் சாலையில் உயர்நிலை பாலம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
வீட்டுவசதி வாரியம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், திருவள்ளூர் மாவட்டம் பாடிக்குப்பத்தில் தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்காக 236 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கொரட்டூரில் சுயநிதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள 35 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் ஏரி திட்டத்தில் 20 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் 11 மத்திய வருவாய் பிரிவு தனி வீடுகள், சென்னை வேளச்சேரியில் சுயநிதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 24 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள், ராமநாதபுரம் பட்டினம்காத்தான் திட்டப் பகுதியில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐந்து புதிய வருவாய் வட்டங்கள்: நாமக்கல் மாவட்டம்-நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து மோகனூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.மங்கலம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆகிய புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை வேளச்சேரியில் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனையும் அவர் திறந்து வைத்தார்.
பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பை துரிதப்படுத்தும் வகையில், சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்திலும், அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் பேரிடர் மேலாண்மைக்கான காணொலி கருத்தரங்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் பழனிசாமி திறந்தார்.