ரூ.500 கோடி சொத்தை அபகரிக்க முயன்றதாக, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க நிர்வாகிகள் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் துணைத் தலைவர் வி.ஆனந்தராஜ், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், எங்களது சங்கத்தின் தலைவர் வி.டி.பத்மநாபன், பொருளாளர் எம்.மாரிதங்கம், செயலர் ஆர்.சந்திரன் ஜெயபால் ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி சங்கத்தின் விதிமுறைகளை மீறியும், சங்க நிர்வாகக் குழு, பொதுக் குழு அனுமதி இல்லாமலும் சென்னை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் தாங்கள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் என அறிவித்துக் கொண்டனர். இவர்களது காலத்துக்கு பின்னர், அவர்களது வாரிசுகளுக்கு அறக்கட்டளையின் சொத்துக்கள் உரிமை என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, இராமச்சந்திரா பப்ளிக் பள்ளி ஆகியவற்றை தாங்கள் தொடங்கிய அறக்கட்டளை மூலம் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே முறைகேடான வழியில் ரூ.500 கோடி சொத்தை அபகரிக்க முயலுகிறவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் 3 பேர் மீதும் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.